×

மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் பணம் கிடைப்பதில் சிக்கல்

மதுரை, ஜூன் 20: மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு பால் பணம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு அவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, பால் பணம் என்று ஒரு தொகை வழங்கப்படும். நகர் பகுதிகளை சேர்ந்த தாய்மார்களுக்கு ரூ.600ம் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த தாய்மார்களுக்கு ரூ.700ம் வழங்கப்படும். டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது, தாயின் கையில் இந்த தொகை கொடுக்கப்படும்.

மதுரை அரசு மருத்துவமனை, தென்மாவட்டத்திலேயே மிகப்ெபரிய மருத்துவமனை என்பதால், பிரசவத்திற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர் வருகின்றனர். இவர்கள் பிரசவமாகி வீட்டுக்கு திரும்பும்போது, டிஸ்சார்ஜ் சம்மரியுடன் (நோட்டு) பால் பணத்திற்கான செக்கும் கொடுக்கப்படுவது நடைமுறை. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பால் பணம் வழங்குவதில் பலவேறு குளறுபடிகளும், காலதாமதமும் ஏற்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையை பொருத்தவரை தினமும் சுமார் 40 தாய்மார்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். ஆனால் இதில் சுமார் 20 பேர் வரைதான், பால் பணத்திற்கான செக்கை பெறுகின்றனர். மற்றவர்கள் ஓரிரு வாரங்கள் கழித்து வரும்படி கூறி, அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து சவிலியர்கள் கூறுகையில், ``மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதார மையம் (ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ்) ஏழை தாய்மார்களின் நலன் கருதி, இந்தப்பால் பணத்தை வழங்குகிறது. இங்கு, சராசரியாக 30 முதல் 40 பேருக்கு தினமும் இப்பணம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், இத்திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து குறைந்த தொகை அனுப்பப்பட்டது. இதனால், பிரசவித்த அனைவருக்கும் கொடுக்க முடியாமல், சிலரை மீண்டும் வரச்சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் எங்களிடம் தகராறு செய்கின்றனர். இந்தப்பணம் முறைாயாக கிடைத்தால், நாங்களும் முறையாக விநியோகிப்போம்’’ என்றனர்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு