×

தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பாக்கி நோயாளிகள் கடும் அவதி தமிழகம் முழுவதும்

வேலூர், ஜூன் 20:தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக இஎஸ்ஐ மருத்துவமனைகள் தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளதால், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் 4 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் 12 தலைமை மருத்துவமனைகளும், சென்னை மண்டலத்தில் 39 மருந்தகங்களும், மதுரை மண்டலத்தில் 63 மருந்தகங்களும், கோவை மண்டலத்தில் 43 மருந்தகங்களும், சேலம் மண்டலத்தில் 61 மருந்தகங்களும் என மொத்தம் 206 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை கண்காணிக்க சென்னையில் தலைமை அலுவலகமும், மாநிலம் முழுவதும் 25 கிளை அலுவலகங்களும் செயல்படுகிறது.

இந்த இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு தொழிலாளர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இதில், ஒரு சில உடல் பாதிப்புகளை கண்டறிய ஸ்கேன் எடுப்பது அவசியம். இந்நிலையில், பெரும்பாலான இஎஸ்ஐ மருத்துவமனைகளில் டெக்னீசியன்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

மேலும் ஸ்கேன் இயந்திரங்கள் பராமரிப்பின்றி பழுதாகி உள்ளது. இதனால், இஎஸ்ஐ மருத்துவமனைகள் தனியார் ஸ்கேன் சென்டர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட ஸ்கேன் சென்டர்களுக்கு நோயாளிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதற்கான, தொகை குறிப்பிட்ட கால இடைவெளியில் இஎஸ்ஐ நிர்வாகம் சார்பில் தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு காசோலையாக வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால், இஎஸ்ஐ மருத்துவமனைகள் தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு தலா ₹6 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தனியார் ஸ்கேன் சென்டர்களில் இஎஸ்ஐ மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுக்க மறுத்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் சிகிச்சையின் தரம் உயர்த்துவதில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. ஸ்கேன் எடுப்பதற்கு மட்டுமின்றி சிகிச்சை பெறும் நோயாளிகள் பல்வேறு விதங்களில் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஸ்கேன் உட்பட பல்வேறு வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்...