×

குடிமகன்கள் கேட்கும் சரக்கு கிடைக்கிறதா? கடைகளில் ஆய்வு செய்ய டாஸ்மாக் மேலாளர்களுக்கு உத்தரவு தமிழகம் முழுவதும்

வேலூர், ஜூன் 20:தமிழகம் முழுவதும் குடிமகன்கள் கேட்கும் சரக்கு கடைகளில் கிடைப்பதை உறுதி செய்ய கடைகளுக்கு நேரில் சென்று டாஸ்மாக் மேலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கிர்லோஷ்குமார் அனைத்து டாஸ்மாக் மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீப காலமாக கடை பணியாளர்கள் குறிப்பாக மேற்பார்வையாளர்கள், பணி நிமித்தமாக என்று கூறி அடிக்கடி தலைமை அலுவலகம் வருவது தெரிய வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட மேலாளர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர் எவ அனைவரும் உரிய நேரத்தில் சுழற்சி முறையில் பணியில் உள்ளதை நேரில் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட மேலாளர்கள் அனைவரும் கடை பணியாளர்களின் தினசரி வருகை பதிவேட்டினை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சரக்கு பட்டியல் சமர்ப்பிக்க வரும் மேற்பார்வையாளர்கள் அங்குள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

தலைமை அலுவலகம் வரும் கடைபணியாளர்கள் அந்தந்த மாவட்ட மேலாளரின் அனுமதியோடு, அனுமதி ரசீதில் மாவட்ட மேலாளரின் கையொப்பத்துடன் முத்திரை பெற்று வர வேண்டும். மனுக்கள் அளிக்க வேண்டும் என்றால், அந்த மனுக்கள் மீது மாவட்ட மேலாளரின் பரிந்துரையுடன், முதுநிலை மண்டல மேலாளர் மூலமாக மட்டுமே மனுக்கள் அனுப்பப்பட வேண்டும்.

கடைபணியாளர்களின் அன்றாட பணிகளான வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்குதல், வாடிக்கையாளர்கள் கேட்கும் மது வகைகள் மற்றும் பீர் வகைகள் வழங்கப்படுவது, தினசரி சிட்டா பராமரிக்கப்படுவது, சரக்கு பதிவேடுகள் மற்றும் இதர பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுவது ஆகியவற்றை மாவட்ட மேலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சில்லரை விற்பனை விலையில் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகள் விற்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது, அதிக விலை வைத்து விற்கும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து அதே கடையில் இரண்டு முறை அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அந்த கடையின் மேற்பார்வையாளரும் கூட்டு பொறுப்பாவார். எனவே, விற்பனையாளர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை போன்றே மேற்பார்வையாளர் மீது எடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் நிறுவனம் பற்றிய வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அலுவலர்களின் உரிய அனுமதியின்றி தகவல்களை பதிவு செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...