×

பாசனத்துக்கு நீரின்றி கருகும் நெல் பயிர்கள் விவசாயிகள் வேதனை காவேரிப்பாக்கம் அருகே

காவேரிப்பாக்கம், ஜூன்20: காவேரிப்பாக்கம் அருகே பாசனத்துக்கு நீரின்றி நெல் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் இறைவா? என்பது வள்ளலாரின் கூற்றாகும். அந்த அளவுக்கு புலவர்களும், பொதுமக்களும் இயற்கையின் மீது அதிக பற்று வைத்து இருந்துள்ளனர். ஆனால் இன்று இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன. விளைநிலங்களை அழித்து வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

ஏரி, குளங்கள், குட்ைடகள், அழிக்கப்பட்டு தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் மழைநீர் சேமிக்க முடியாமல் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. இதன் காரணமாக 40 அடியில் கிடைக்க கூடிய தண்ணீர் 500 அடியிலும் கிடைக்கவில்லை. இதனால் விவசாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வர தொடங்கியது. இதனால் மாவட்டத்திலேயே மிகவும் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பும் தருவாயில் இருந்தது.

இதன் காரணமாக காவேரிப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரத் தொடங்கின. இதனால் விவசாயிகள் கிணறு, ஆழ் துளை கிணறு, மற்றும் ஏரிக்கால்வாய், உள்ளிட்டவைகள் மூலம் தண்ணீர் எடுத்து கடந்த சொர்ணவாரி பருவத்தில் விவசாயம் செய்து முடித்துள்ளனர்.

தற்போது, காரிப் பருவத்தில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இதில் காவேரிப்பாக்கம் ஏரியில் நீர் வற்றியதால் தற்போது நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்லுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகின்றன.

மேலும், தண்ணீர் மற்றும் மின்சாரம் பற்றாக்குறை உள்ளிட்டவைகள் மூலம் இன்று விவசாயம் பாதிப்புக்குள்ளாகி பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே அரசு அதிகாரிகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...