×

நடைபாதை கடையை அகற்ற எதிர்ப்பு லாரிக்கு அடியில் படுத்து வியாபாரி போராட்டம் நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவில், ஜூன் 20: நாகர்கோவில்  நகராட்சியில் ஆக்ரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக வியாபாரி ஒருவர்  லாரிக்கு அடியில் படுத்து போராட்டம் நடத்தினார்.
நாகர்கோவில் நகர  பகுதிகளில் சாலையோரம் மற்றும் பொதுமக்கள் நடைபாதையில் சிறிதும், பெரியதுமாக  ஆக்ரமிப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல் நடைபாதைகளை  ஆக்ரமித்து பிரபல கடைகள் கூட தங்களது பொருட்களை வைத்துள்ளன. இதுபோன்ற  ஆக்ரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் மாற்றிய அன்று மாலையே மீண்டும்  ஆக்ரமிப்புகள் அமைக்கப்பட்டு விடும். இது குறித்து தினகரனில்  தொடர்ந்து செய்தி வெளியானது. கடந்த 12ம் தேதி முதல் ஆக்ரமிப்பு அகற்றம்  தொடங்கியது. அப்போதும் ஆக்ரமிப்பு அகற்றிய  மறுநாளே கடைகள் ஏற்படுவது  குறித்து செய்தி வெளியானது.   இதையடுத்து தினசரி ஆக்ரமிப்புகள்  அகற்றப்படும். இனி எச்சரிக்கை கிடையாது. நடவடிக்கை மட்டும்தான். இதற்காக  தினசரி  நகராட்சி லாரியுடன் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு, நடைபாதை  கடைகள் மற்றும் ஆக்ரமிப்புகள் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என  நகராட்சி ஆணையர் சரவணக்குமார் எச்சரிக்கை செய்திருந்தார். இதன்படி நேற்று  காலை டதி பள்ளி சந்திப்பில் இருந்த ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. அப்போது அங்கு பழக்கடை வைத்திருந்த திருவிதாங்கோடு பகுதியை  சேர்ந்த சுதீர்கான்,  நகராட்சி ஊழியர்கள் தனது பழக்கூடைகள் மற்றும் மேஜை  போன்றவற்றை  பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்   லாரிக்கு அடியில் படுத்து போராட்டம் நடத்தினார். அப்போது, அவர்  கூறுகையில்,  புதிய ஆணையர் பொறுப்பேற்ற பின் 4 முறை என் கடையை அகற்றி  உள்ளனர். இதனால் எனக்கு ரூ.6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடனாளியாகி  உள்ளேன். சாலையோரம் கடை நடத்துவது தவறா? நானும் முறைப்படி வரி  செலுத்துகிறேன். இந்நாட்டு குடிமகன். எனக்கு குமரி மாவட்டம் தான்.

எனவே பொது இடத்தில் கடை நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது. எனது  பொருட்களையும், நஷ்டஈடு தொகையும் தராமல் இங்கிருந்து அகல மாட்டேன். இல்லாவிட்டால் லாரியை  ஏற்றி  கொன்றுவிட்டு பொருட்களை பறிமுதல் செய்து செல்லட்டும் என்றார்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
இந்த  தகவல் அறிந்து தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வடசேரி  சப்இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து  சுதீர்கானிடம், பிரச்னையை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று தெரிவிக்க  வேண்டும்.  பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இதுபோல நடந்து  கொள்ளக்கூடாது என எச்சரித்து, அவரை விசாரணைக்காக நேசமணிநகர் காவல்  நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே டி.எஸ்.பி இளங்கோவும், சம்பவ  இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.மொத்த வியாபாரி அதிர்ச்சிநாகர்கோவில்  மட்டுமின்றி நெடுஞ்சாலைகளிலும் வரிசையாக காலையில் தள்ளுவண்டி, மற்றும்  பழக்கூடைகளை போட்டு, பழங்கள் விற்பனை செய்வது ஒரு சில மொத்த வியாபாரிகளே.  கடை வாடகை, முன்பணம், மின்கட்டணம், இதர வரிகள் எதுவும் கிடையாது. ஒரு சில  வியாபாரிகளை பார்த்து, ஏற்கனவே கடைகளில் தொழில் செய்யும் வியாபாரிகளும்,  இதுபோன்று சாலையோர கடைகளை அமைத்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் பெரும்  பிரச்னையை ஏற்படுத்தும். எனவே இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர  கடைகளை பாரபட்சமின்றி அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கொல்லம் அருகே பரிதாபம் குட்டையில்...