×

கட்டுப்பாட்டு அறைகள் காட்சி பொருளாகின குமரியில் செயல் இழந்த கண்காணிப்பு கேமராக்கள் அலட்சியம் காட்டும் காவல்துறை

நாகர்கோவில், ஜூன் 20: குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா, சில இடங்களில் செயல் இழந்து காட்சி பொருளாக  உள்ளது.  குமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகின்றன. எஸ்.பி.க்கள் மணிவண்ணன், தர்மராஜன் ஆகியோர் இருந்த கால கட்டங்களில் கண்காணிப்பு கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். இரவு நேரங்களிலும் இந்த கேமராக்கள் இயங்கும் வகையில் இருக்க வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளும் சிக்கி உள்ளனர். பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தனியார் உதவியுடன், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாகர்கோவில் நகரை பொறுத்தவரை மணிமேடை, அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. இவற்றில் தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. புறக்காவல் நிலையத்தில் இதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, போலீஸ்காரர் ஒருவர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தது. பின்னர் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக அந்த பணியில் இருந்தவர்கள் மாற்றப்பட்டனர். தற்போது காட்சிகள் அனைத்தும் தானாக சர்வரில் சேமிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் காட்சிகளை போலீசார் பதிவு செய்து வைத்து பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அண்ணா பஸ் நிலையம் மற்றும் மணிமேடையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூடியே கிடக்கின்றன.  அண்ணா பஸ் நிலையத்தை பொறுத்தவரை நகரின் மைய பகுதி ஆகும். காலை முதல் இரவு வரை பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள்  அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகும். இங்கு ஏற்கனவே ஈவ்டீசிங், கொலைகள், திருட்டுகள் அதிகம் நடந்துள்ளன. முன்பெல்லாம் காவல்துறை கண்காணிப்பு, கேமராக்கள் கண்காணிப்பில் இருந்த அண்ணா பஸ் நிலையத்தில் இப்போது எந்த வித கண்காணிப்பும் இல்லை. இதனால் மீண்டும் சமூக விரோத செயல்கள் அரங்கேற தொடங்கி விட்டன. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், கட்டுப்பாட்டு அறையும் மூடியே கிடக்கின்றன. இதே நிலை தான் மணிமேடை பகுதியில் உள்ள கேமராக்களுக்கும் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய ஓகி புயலில் கேமராக்களின் ஒயர்களும் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்தன. இவை மெல்ல, மெல்ல சரி செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதற்கான பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எஸ்.பி. அலுவலகத்தில் அமைக்கும் பணிகளும் நடந்தன. ஆனால் இந்த பணியும் இப்போது கிடப்பில் உள்ளது. கேமராக்களின் செயல்பாடுகள் மிகவும் அவசியம் என்பது பல சம்பவங்களில் நிரூபணமாகி உள்ளன. அசம்பாவிதங்கள் நிகழ வில்லை என்பதற்காக காவல்துறை அலட்சியமாக இருக்க கூடாது. அதை நிகழாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் எப்போதும் இருக்க வேண்டும். எனவே உடனடியாக செயல்படாமல் கிடக்கும் கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய டி.எஸ்.பி. கவனிப்பாரா?
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. மேலும் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துள்ளது. காலை மற்றும் மாலை வேளையில் நகருக்குள் வாகனங்களில் செல்வதே மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளது. ஆங்காங்கே ஊர்க்காவல் படையினரும், ஆயுதப்படை போலீசாரும் நின்று அவர்களால் முடிந்தளவு  போக்குவரத்தை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சி பலன் அளிப்பதில்லை. எனவே உடனடியாக கூடுதல் போலீசாரை நியமித்து நகரில் முதற்கட்டமாக போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண புதிய டி.எஸ்.பி. இளங்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே இவர் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டராக பணியாற்றிவர் என்பதால், நகரின் தேவை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்