×

பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி சார்பில் அரசு பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

காரைக்கால், ஜூன் 20: பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி சார்பில், அரசு பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையம் (பஜன்கோவா) சார்பில் காரைக்கால் மாணவர்களுக்கான தனிப்பட்ட சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கோடைக்கால பயிற்சியின் அங்கமாக, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் பொறுப்பு அதிகாரி ஜெயாசிவராஜன் வழி காட்டுதலில்படி, தலைவர் வைஷ்ணவி தலைமையில் தனிப்பட்ட சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. திருநள்ளாற்றை அடுத்த சுரக்குடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர் எவ்வாறு தினமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு கருத்துகளை கூறினர்.

 மேலும், சுகாதாரத்துக்கான எட்டு கருத்துகளை விளக்கி கூறினர். தமது கைகளை எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். சுத்தமாக கழுவாத கைகளால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினர். மேலும், மாணவர்களுக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே கலந்துரையாடினர். நிறைவாக, அங்குள்ள மாணவர்களில் தூய்மையான மற்றும் சுகாதாரமான மாணவராக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  மிஸ்டர் கிளீன், மிஸ் கிளீன் என்ற பட்டத்தை வழங்கினர். மாணவர்கள் அனைவரும் தூய்மையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும், தினமும் நல்ல பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, திருநள்ளாறு சுரக்குடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில்,  திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.  பேரணியில் மாணவர்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை கழிவுகளை பற்றி கோஷமிட்டனர். திடக்கழிவு மேலாண்மையில் ஒரு மாற்றத்தை அங்குள்ள கிராம மக்களிடம் கொண்டு வர வேண்டும் என்று உழைகின்றனர். இந்த பேரணி பள்ளியில் தொடங்கி அந்த கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளை சுற்றி இறுதியில் பள்ளியில் பேரணியை முடித்தனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...