×

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் அனுமதியின்றி யாகம் பக்தர்கள் எதிர்ப்பு

கும்பகோணம், ஜூன் 20: தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் நிர்வாக அனுமதியின்றி யாகத்ைத அர்ச்சகர் நடத்தியதற்கு அப்பகுதி பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. அர்ச்சகராக பிரசன்னா செயல்பட்டு வருகிறார். நேற்று காலை பெரியநாயகி அம்மன் சன்னதி முன்  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக அர்ச்சகர் பிரசன்னா திடீரென யாகம் வளர்த்து கொண்டிருந்தார். இதில் 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அம்மன் கோயில் திறக்கப்பட்டு யாகம் வளர்த்ததை பார்த்து அர்ச்சகரிடம் அப்பகுதி மக்கள் கேட்டனர். ஆனால் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜபோன்ஸ்லேவுக்கும், தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனுக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கூறுகையில், அம்மன் கோயிலை அர்ச்சகர் பிரசன்னா தினமும் திறப்பதில்லை. பூஜைகள் நடத்துவதில்லை. அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் என யாரிடமும் அனுமதி வாங்காமல் இவரே பக்தர்களிடம் யாகம் நடத்த ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார். ஏற்கனவே இதுபோன்று யாகங்களை நடத்தியதால் 2 முறை பிரசன்னா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், தாராசுரம் கோயில் அம்மன் சன்னதியில் யாகம் நடத்த அர்ச்சகர் அனுமதி வாங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். விசாரணை நடத்துமாறு கோயில் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணையில் தான் உண்மை தெரியவரும் என்றார்.அர்ச்சகர் பிரசன்னா கூறுகையில், கோயிலில் அம்மனுக்காக தான் யாகம் நடத்தப்பட்டது. மாதம்தோறும் நடைபெறும் யாகமாகும். இங்கு பக்தர்கள் பிரச்னை செய்யவில்லை என்றார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா