×

கடைசி தேதிக்கு பின்னர் வருமான வரி தாக்கல் செய்தால் 1000 முதல் 10 ஆயிரம் வரை தாமத கட்டணம் வசூலிக்கப்படும்

ஆம்பூர், ஜூன் 19: கடைசி தேதிக்கு பின்னர் வருமான வரி தாக்கல் செய்தால் ₹1,000 முதல் ₹10 ஆயிரம் வரை தாமத கட்டணம் வசூலிக்கப்படும் என ஆம்பூரில் வருமான வரி முதன்மை ஆணையர் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் சார்பாக வருமான வரி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல வருமான வரி முதன்மை ஆணையர் தேவதாசன் தலைமை தாங்கினார். இந்திய தோல் ஏற்றுமதி கவுன்சில் துணை தலைவர் அகில் அஹ்மத் முன்னிலை வகித்தார். ஆம்பூர் டேனர்ஸ் சங்க செயலாளர் பயாஸ் அஹ்மத் வரவேற்றார்.

இதில் வருமான வரி முதன்மை ஆணையர் தேவதாசன் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ₹10 லட்சத்து 3 ஆயிரம் கோடி வருமான வரி வசூலாகியுள்ளது. வருமான வரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டில் இந்த வரி வசூல் ₹11 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கபடுகிறது. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் வரும் ஜூலை 31க்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கை அவசியமான பிரிவை சேர்ந்தவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்களது வரியை செலுத்தி விட வேண்டும். இறுதி தேதிக்கு பின்னர் கால தாமதமாக வரி செலுத்தும் பட்சத்தில் தாமத கட்டணமாக ₹1,000 முதல் 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்.

நமது நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரி கட்டுதல் மிக அவசியம். நாட்டின் முன்னேற்றம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதாவது, சிறந்த பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 5 வது இடத்தில் உள்ளது. இன்னும் 30 ஆண்டுகளில், வரும் 2050ல் இந்தியா உலக அளவில் சிறந்த பொருளாதார நாடுகளின் வரிசையில் முதலிடம் பிடிக்கும்’ என பேசினார். பின்னர், தோல் தொழிலதிபர்கள் வருமான வரி குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவில் சாலை, கல்வி உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது. உலகில் நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் உள்ள வரி விகிதம் மற்ற நாடுகளை விட மிக அதிகம். அதனால் தான் இன்று தரமான வாழ்க்கை நடத்தும் நாடுகளாக அவை திகழ்கின்றன.

வருமான வரி செலுத்துவோர் தங்களது கணக்குகளை எந்தவித ஒளிவு மறைவின்றி தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்கள் அதிகபட்சமாக 30 சதவீதம் மட்டுமே செலுத்த வேண்டும். வருமான வரி சோதனை நடத்தப்பட்டு அதில் சிக்கினால் அதிகபட்சமாக 77 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும். டிடிஎஸ் மற்றும் இதர தொகை வசூலிக்கப்படுவதை உடனடியாக தொழில் நிறுவனங்கள் அன்றன்றே அரசுக்கு செலுத்தி விட வேண்டும். காலதாமதமாக செலுத்துவது என்பது நியாயமற்றது’ என்றார்.

இதில், வருமான வரி இணை ஆணையாளர் சுப்ரியா பால், இந்தியன் ஷூ பெடரேஷன் துணைத் தலைவர் வி.முத்துக்குமரன், என்.எம்.இஜட் குழும பொதுமேலாளர் தமீம் அஹமத் மற்றும் ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த தோல் தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தென்னிந்திய ஷூ உற்பத்தியாளர் சங்க கவுரவ செயலாளர் மதார் கலீலூர் ரஹ்மான் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது கே.வி.குப்பம் அருகே