×

திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்னை- சேலம் 8 வழிசாலை திட்டத்துக்கு எதிராக வலுவடையும் போராட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 15: திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக அமையும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது. மேலும், விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. சென்னை - சேலம் இடையே, 8 வழிச்சாலை 10 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ளது. பசுமை விரைவுச் சாலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சாலைத்திட்டத்துக்கு, சேலம், கிருஷ்ணகிரி, திருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் கையகப்படுத்த அரசு திட்டமிட்டு, அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 277 கிமீ தொலைவில், பெரும்பான்மையான தூரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இந்த மாவட்டத்தில் மட்டும் 8 வழிச்சாலை அமைய உள்ள 122 கிமீ தொலைவில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், வனப்பகுதி, கட்டிடங்கள், பாசன கிணறுகள் அழியும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, கலெக்டர் கந்தசாமி கடந்த வாரம் வெளியிட்டார். எனவே, இத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இந்த புதிய சாலை அமைய உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் 96 கிராமங்கள் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.

அதோடு, வரும் 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில், இது தொடர்பான பிரச்சனையை எழுப்பவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் விவசாய சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், அந்த சங்கத்தின் தேசிய மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, இக்கூட்டத்திற்கு பிறகு, போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என தெரிகிறது.

சேலம் மாவட்டத்தில் நிலத்தை அளவீடு செய்து கற்கள் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் போராட்டம் வலுபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...