×

ராணிப்பேட்டையில் ஆய்வு கூட்டம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எந்த தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை: கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை, ஜூன் 19: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை என்று ராணிப்பேட்டையில் நடந்த மாவட்ட மகளிரணி ஆய்வு கூட்டத்தில் கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார். வேலூர் மாவட்ட திமுக ஒருங்கிணைந்த மகளிரணி, தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர்கள் ஆர்.காந்தி எம்எல்ஏ, ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் கார்த்திகேயன் (வேலூர்), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), மோகன் (சென்னை அண்ணா நகர்), மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, மேற்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு) முத்தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி வரவேற்றார். இதில் திமுக மாநில மகளிரணி அமைப்பாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசியதாவது:

இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த உதவி தொகையும் கிடைக்கவில்லை. கிராமங்களுக்கு எல்லாம் மின்சார திட்டம் கொண்டு வந்து விட்டதாக பிரதமர் மோடி சொல்கிறார். இதை திமுக தலைவர் கருணாநிதி முன்பே செய்து விட்டார். தமிழகத்தை மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடி மாநிலமாக அவர் கொண்டு வந்தார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த பல தொழிற்சாலைகளை இவர்கள் மூடி வருகிறார்கள். இந்த ஆட்சியில் கொள்ளை அடிப்பது மட்டும்தான் நடந்து வருகிறது.

இந்த ஆட்சியில் மாணவர்கள் நலன் இல்லை. நீட் தேர்வினால் சாதாரண ஏழை எளிய மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். 1 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களின் படிப்பு வீணாகிறது. இதை மகளிரணியினர் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். எனவே நீங்கள் இந்த ஆட்சியை பற்றி வீடு, வீடாக சென்று எடுத்து சொல்ல வேண்டும். இதுகுறித்து 10 பேரை கூட்டி தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த வேண்டும். திமுகவில் உழைத்தால் அதற்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு. நாட்டில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து விட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது குறித்து தமிழக முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

மகளிரணி, தொண்டரணியினர் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். மகளிரணி செயல்பாடுகளை மினிட் புத்தகத்தில் கொண்டு வர வேண்டும். இதை நான் அடுத்த முறை வரும்போது பார்ப்பேன். கூட்டத்திற்கு வராத மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்படும். இதற்கு பதில் தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இருண்ட கால மற்றும் ேகலி கூத்தான ஆட்சியை உடனடியாக அகற்ற வேண்டும். திமுக ஆட்சி மலர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகு அதில் இருந்த ரசாயன கசிவு வெளியேறி வருகிறது என சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆலையை மூடுவதற்கான அறிகுறி அறவே இல்லை. சிபிஎஸ்இ தேர்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளை நீக்கிவிட்டு இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு எழுத செய்வதுதான் பாஜ அரசின் அடிப்படை கொள்கை.

மத்திய பாஜ அரசு மக்களை பிரித்து தான் பார்க்கிறது. பல்வேறு தடைகளை தாண்டி நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக்கூறியும் மத்திய அரசு அதனை செய்ய தயாராக இல்லை. நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இல்லை. காவல் துறை பாதுகாப்பில்தான் உள்ளார்’ என்றார்.

Tags :
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...