×

நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சுவதை தடுக்க நடவடிக்கை மருத்துவ கல்லூரி, ரசாயன ஆலையில் கவர்னர் ஆய்வு

காலாப்பட்டு, ஜூன் 18: காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் ரசாயன ஆலையின் நிலத்தடி நீர் பயன்பாடு குறித்து கண்காணிக்க கவர்னர் கிரண்பேடிநேற்று திடீர் ஆய்வு நடத்தினார். புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களாக நிலத்தடி நீர் வீணாவதை தடுக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 8ம் தேதி காட்டுக்குப்பத்தில் உரிமம் இன்றி ஆழ்துளை கிணறு மூலம் நீரை எடுத்து தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பதை கண்டறிந்து, அதற்கு `சீல்’ வைத்து மூடினார். நேற்று முன்தினம் குருமாம்பேட்டில் உள்ள பீர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு நீர் எவ்வளவு எடுக்கப்படுகிறது என்பதை அறிய மீட்டர் பொருத்தவும், பெரிய அளவில் குடிநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, நேற்று காலை 166வது களஆய்வாக புதுவை அடுத்த கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ெசன்றார். ராஜ் நிவாசில் இருந்து தனி அரசு பேருந்தில் பொதுப்பணித்துறை, நிலத்தடி நீர் ஆணையம், அறிவியல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அவர் புறப்பட்டு சென்றார். 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது? எவ்வளவு செலவு செய்யப்படுகிறது? என்பதனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், அதிக அளவில் நீர் உறிஞ்ச கூடாது எனவும் அறிவுரை வழங்கினார். மேலும், மழைநீர் சேகரிப்பு கிணறு முறையாக அமைக்காமல் இருப்பதை பார்த்த கவர்னர், உங்கள் வளாகத்தில் விழும் மழைநீர் முழுவதையும் சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு கிணறு அமைக்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக பொதுப்பணித்துறை, பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து எந்த இடத்தில் மழைநீர் சேகரிப்பு கிணறு அமைத்தால் அதிக நீரை சேமிக்க முடியுமோ, அந்த இடத்தை தேர்வு செய்து அமைக்கும்படி கூறினார்.

இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலைக்கு சென்ற கவர்னர், அங்கும் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்
படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். இதில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற் பொறியாளர் கன்னியப்பன் மற்றும் நிலத்தடி நீர் ஆணைய அதிகாரிகள், அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கவர்னர் கிரண்பேடி ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தியது அங்கு பரபரப்பை
ஏற்படுத்தியது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...