×

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய  பல மூலிகைகள் நமது நாட்டில்  உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைதான் ‘கீழாநெல்லி. இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகளிலும் வளரக்கூடியது.

கீழாநெல்லியின் இலைகளில் ‘பில்லாந்தின்’என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும் தாவரங்களில் கீழாநெல்லியும் ஒன்று. கீழாநெல்லியின்  இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது.  இதன் வேர் 10 கிராம்  எடுத்து இடித்து பால்  அல்லது மோரில்  கலந்து  குடித்தால் கல்லீரலை  பலப்படுத்தி  கல்லீரல்  சம்பந்தமான நோய்கள்  வராமல்   தடுக்கிறது.

இதன் சாற்றை  மஞ்சளுடன்  கலந்து பூச சொரியாசிஸ்  சரியாகும்.  கீழாநெல்லிச் செடியை  நன்கு  அரைத்து சொறி,  சிரங்கு படைகளில்  பற்றுப்  போட்டால்  
குணமாகும். இதன் இலையை  எண்ணெயில்  இட்டு காய்ச்சி,  தலைக்கு  தேய்ப்பதால்,  உடல்  குளிர்ச்சியாக  இருப்பதுடன்  கண்களின் சிவப்புத்தன்மை,  எரிச்சலைப்  போக்குகிறது  பார்வை  தெளிவாகும்.

 கீழாநெல்லிச்  செடியை நன்றாக மென்று,  பல் துலக்கி  வந்தால்  பல்வலி குணமாகும்.   சிறுநீர்  பாதை எரிச்சலை  குணமாக்குகிறது.  மஞ்சள் காமாலையால்  உடல் சோர்வு,  வாந்தி, குமட்டல், பசியின்மை  ஏற்படும்.  இது  அதிகரிக்கும்போது கல்லீரல்  வீக்கம் ஏற்படும். இதை  சரிசெய்ய  கீழாநெல்லி  உதவுகிறது.

 கீழாநெல்லி  சாறுடன்  உப்பு சேர்த்து  தோலில்  பூசினால்  அரிப்பு  குணமாகும்.  மேலும், இதன்  இலையுடன்  சிறிது மஞ்சள்  சேர்த்து  அரைத்து,  உடலில்  தேய்த்து  15 நிமிடங்கள்  ஊறவிட்டு குளித்தால்  தோல் நோய்கள் குணமாகும்.  கீழா நெல்லிச் செடி,  கரிசலாங்கண்ணி இலை,  தும்பை  இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை  சமபங்கு  எடுத்து,  காய்ச்சிய பால்விட்டு  அரைத்து  காலை,  மாலை  இருவேளை   பாலுடன்  கோலிக்குண்டு அளவு குடித்து  வந்தால்  சில நாட்களிலேயே  மஞ்சள்  காமாலை  குணமாகும்.

கீழாநெல்லியை  அரைத்து பசும்பாலுடன்  கலந்து காலை  - மாலை இருவேளை தொடர்ந்து  3 நாட்கள்  குடித்து வந்தால்,  உடல் சூடு  தணிந்து  குளிர்ச்சி  பெறும்.  விஷக் கிருமிகளால்  ஏற்படும்  நோய்களை  குணப்படுத்துவதற்கா  மருந்தாகவும்   இதைப் பயன்படுத்தலாம்.

தொகுப்பு : எஸ். மகாலட்சுமி, காரைக்கால்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்