×

மழைக் கால நோய்கள் தடுக்க ! தவிர்க்க…

நன்றி குங்குமம் டாக்டர்

மழைக் காலம் வந்துவிட்டாலே ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவது வாடிக்கைதான். அதிலும் குழந்தைகள் உள்ள வீடுகளின் பாடுதான் படு திண்டாட்டம். ஒரு குழந்தைக்கு சளி பிடித்தாலோ காய்ச்சல் வந்தாலோ இன்னொரு குழந்தைக்கும் அது உடனே பரவிவிடும். அடுத்தபடியாக அது பெரியவர்களுக்குத் தொடரும். வயதானவர்கள் வீட்டில் இருந்தால் இன்னும் சிக்கல்தான். இப்படி மழைக்காலம் வந்தாலே மருத்துவமனைச் செலவுகள் அலைகழிப்பது வாடிக்கையாகிவிட்டது.

உண்மையில் மழைக்காலம் என்றில்லை பருவகாலங்கள் எதுவானாலும் வியாதிகளைப் பரப்புவது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான். மழைக்காலத்தில், சாதாரண சளியில் தொடங்கி, மூக்கடைப்பு, இருமல், காய்ச்சல் எனப் பல்வேறு நோய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றித் தாக்கலாம். இந்த உபாதைகளைத் தவிர்க்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் கவனம் வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு குறையும்போதுதான், தொற்றுக் கிருமிகளுக்கு நம் உடல் வரவேற்பு சொல்லும்.

கொசு எனும் கொடூர வில்லன்!

கொசுக்கள்தான் கொடூரமான வைரஸ் காய்சல்களுக்கு அடிப்படை. அவற்றின் கால் நுனிகளில் அமர்ந்திருக்கும் வைரஸ்கள் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு என வகைவகையான காய்ச்சல்களை உடலுக்குள் செலுத்திவிடுகின்றன.

நீர்த்தேக்கம் கவனம்!

மழைக் காலத்தில் உரிய வடிகால்கள் அமையாவிட்டாலோ அல்லது அவை அடைத்துக்கொண்டாலோ, உருவாகும் குட்டி நீர்த்தேக்கங்கள்தான் கொசுப் பட்டாளத்துக்கு கெஸ்ட் ஹவுஸ். அசுத்த நீர் மட்டுமில்லை குடிநீர், மழைநீர் போன்ற தூய்மையான நீர்ப்பரப்பும்கூட சிக்குன்குனியா, டெங்கு போன்ற காய்ச்சல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. இந்தக் காய்சல்களைப் பரப்பும்  கொசுக்களுக்கு அடைக்கலம் தருவது இவைதான். எனவே, வீட்டுக்குள்ளும், வெளியேயும் நீர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

வாட்டர் டேங்கிலும்கூட கொசு ஊடுருவும் இடைவெளிகளைப் பார்த்து அடைத்துவிடுவது நல்லது. கூடுதல் உபயோகத்துக்கு அதிகப்படியாகக் குடிநீர் பிடித்துவைத்திருக்கும் பாத்திரங்களையும்கூட, தூய்மையான துணியால் வேடு கட்டி, அதன் மேல் வழக்கமான மூடிகளைக்கொண்டு மூடலாம்.மழைநீர் பெருக்கத்தில், குடிநீர்க் குழாய்களில் கழிவு நீர் கலந்துவிடுவது சாதாரணமாக நடக்கும். அதை உத்தேசித்து, வீட்டைச் சுற்றி அசுத்தம் அதிகமாகும் நாட்களில் ப்ளீச்சிங் பவுடரை உபயோகிக்கலாம்.

மழை சீஸனில் மிகவும் சாதாரணமானது ஃப்ளூ காய்ச்சல். மூன்று முதல் ஐந்து தினங்கள் மட்டுமே அதன் பாதிப்பு இருக்கும். ஆனால், வந்திருப்பது சாதாரண காய்ச்சலா அல்லது மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற விபரீதக் காய்ச்சலா என்று உணர முடியாதபட்சத்தில், காய்ச்சல் வந்ததும் அவசரத்துக்கு கைவசமிருக்கும் ‘பாராசிட்டமால்’ மாத்திரைகளைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை. ஆனால், இரண்டாவது நாளும் அதன் வீரியம் குறையாதுபோனால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

வீட்டுக்குள்ளே துணி மூட்டைகள் மற்றும் சுத்தமில்லாத இடங்களில், கொசுக்கள் அதிகம் அடைக்கலமாகும். திரைச்சீலைகள் அலங்கார விரிப்புகளையும்கூட மழைக் காலத்துக்கான கூடுதல் கவனிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.குழந்தை முதல் பெரியவர் வரை கொசுத் தொந்தரவு இல்லாத உறக்கத்துக்கு கொசுவலைதான் பெஸ்ட். பிற்காலத்திய மூச்சு தொடர்பான பக்கவிளைவுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பாதிப்பு உள்ளவர்கள் புகை, லிக்யூட், மேட் என ரகம் ரகமான கொசு விரட்டிகள் பயன்படுத்தும் விஷயத்தில் கூடுதல் கவனம் வேண்டும்

பொதுவாக, வைரஸ் காய்ச்சல்களில் சாதாரண ஃப்ளூவில் தொடங்கி பன்றிக்காய்ச்சல் வரை சுமார் 21 ரகங்கள் அடையாளம் காணப்படுகின்றன. இதில், உடலின் உள் அவயங்களில் ரத்தப்போக்கை உண்டாக்கும் டெங்கு மற்றும் ஆப்பிரிக்க இறக்குமதியான யெல்லோ ஃபீவர் போன்ற விபரீதக் காய்ச்சல்களும் அடக்கம். தக்காளிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனப் பலவிதமான காய்ச்சல்கள் இந்த சீசனில் பரவினாலும் டெங்குதான் நம்முடைய பெரிய அபாயம்.

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இந்த மழை சீஸனிலும் நாம் அதிகம் எதிர்த்துப் போரிட வேண்டியது டெங்கு கொசுவாகத்தான் இருக்கும். டெங்குவை வரவழைக்கும் ‘ஏடிஸ் எஜிப்டி’ பெண் கொசுக்கள் கடிப்பதால், நமது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழகம், கேரள மாநிலங்களை அதிகம் பாதித்த சிக்குன்குன்யாவும் வைரஸ் காய்ச்சல்தான்.

வைரஸ் போலவே பாரசைட் தொற்று உண்ணிகள் பரப்பும் காய்ச்சலான மலேரியா, எல்லா சீஸனிலும் வரும். ஆனால், இவை மழைக் காலத்தில் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும். இந்த பாரசைட்டின் மற்றொரு முகம் யானைக்கால் வியாதி. இவை தவிர, பாக்டீரியா காய்ச்சலான டைபாய்டு மழை சீஸனில் சூடு பிடிக்கும். ஐந்து நாட்களைத் தாண்டியும் காய்ச்சல் தொடர்ந்தால், ரத்தப் பரிசோதனை மூலம் டைபாய்டை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

உணவில் கவனம்!

மழைக் காலத்தில் இயல்பாகவே உடலின் ஜீரணசக்தி குறைந்துவிடுவதால், அதிகம் காரம், எண்ணெய், மசாலா கலந்த உணவுகளை ஒதுக்கிவிடலாம். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம். சுகாதாரமற்ற சூழலால் ஏற்படும் வாந்தி பேதியை இது தவிர்க்கும்.உடல்நலக் குறைவானவர்களுக்கு இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த எளிமையான உணவுகளே உகந்தது.குளிர்காலத்தில் நாம் வழக்கமாக அருந்தும் காபி, டீக்கு மாற்றாக, காய்கறி சூப் அருந்தலாம். சமையலுக்கு, கொதித்து ஆறியதை வடிகட்டி உபயோகிப்பதே உசிதமானது.

மழையில், பலரும் தலைக்குக் குளிப்பதைத் தவிர்த்துவிடுவது உண்டு. இதனால், தலையில் தொற்றுகள் அதிகமாகும். தலைக்குக் குளித்ததும், கேசத்தை நன்றாக உலர்த்த வேண்டும். சைனஸ், தலைப்பாரம், ஒற்றைத் தலைவலிப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

இதனையும் கவனிங்க!

சுற்றுப்புறத்தில் எலி நடமாட்டம் இருந்தால், அவற்றை உடனடியாகஅப்புறப்படுத்திவிடவேண்டும்.குழந்தைகளை தேங்கிக்கிடக்கும் நீரில் விளையாடவிடுவது தவறு.உலராத உடைகளை அணிவது, நனைந்த உள்ளாடைகளை மாற்றாமல் இருப்பது போன்றவை பூஞ்சைத் தொற்றுக்கு வரவேற்பு சொல்லும்.வெளியே சென்றுவிட்டு வந்ததும், பாதங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.  குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் என்றபோதிலும், ஓய்வுடன் கூடிய விடுமுறை அனைவருக்கும் நல்லது.தூய்மை மற்றும் சுகாதாரம் பேணுவதை நம்மிடம் இருந்து துவக்கி, அந்த வட்டத்தை முடிந்தவரை விரிவுபடுத்துவதை மறக்க வேண்டாம்.

மழைக் கால நோய்களிலிருந்து தப்பிக்க!

கொதி நீரில், நொச்சி இலை, பச்சைக் கற்பூரம் சிறு துண்டைப் போட்டு ஆவி பிடிக்கலாம். இவற்றுடன் நீர்க்கோவை மாத்திரைகளை நெற்றியில் பற்றாகப் போடலாம். அரசு மருத்துமனைகளில் நீர்க்கோவை மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கும். தும்மல், தலைபாரம் நீங்கும்.  குழந்தைகளுக்கு டான்சில் வீக்கம் ஏற்படும்.  இதற்கு மூன்று ஓமவல்லி இலையுடன்,  இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்து, புகட்டும் சங்கு அளவுக்கு குழந்தைக்குக் கொடுக்கலாம். சுவைக்கு தேன் சேர்த்துத் தரலாம்.

இருமலைப் போக்க ஐந்து ஆடாதொடா இலைகளின் நடுநரம்பை நீக்கி, கழுவி 2 ஸ்பூன் தேன் விட்டு லேசாக வதக்கி, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராகும் வரை சுண்டக்காய்ச்சி, வடிகட்டி அருந்தி வரலாம். குடிநீர் பாத்திரத்தில் 10 துளசி இலைகளைப் போட்டு மழைக் காலம் முழுக்க அருந்தலாம்.சுக்கு கருப்பட்டி கலந்த சுக்கு காபி அருந்திவந்தால், செரிமான உறுப்புகள் தூண்டப்பட்டு உடலுக்கு நல்ல சுறுசுறுப்பு கிடைக்கும்.  

சுரை, பூசணி உள்ளிட்ட நீர்க் காய்களைத் தவிர்க்கலாம்.வாரம் இரு முறையேனும் கபத்தை நீக்கும் தூதுவளை இலை துவையல் குடும்ப மெனுவில் இருக்கட்டும்.நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகம். மழைக்காலம் தொடங்கியதுமே ஒரு நெல்லிக்கனியை மெல்வது, நோய் எதிப்புச் சக்தியை மேம்படுத்தி, சளி மற்றும் காய்ச்சல் உருவாவதைத் தடுக்கும்.

தொகுப்பு : இளங்கோ கிருஷ்ணன்

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்