கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

கண்ணிழந்தார் பெற்றிழந்தார்

நித்தம் ஒரு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும் இவ்வுலகத்தில் பார்வை இல்லாமல் ஒரே ஒரு நாளைக் கடத்துவதும் கடினமே. பிறவியிலேயே பார்வை இல்லாமல் இருப்பவர்கள் அந்த வாழ்வுக்கு பெருமளவுக்குப் பழகி இருப்பார்கள். திடீரென பார்வையிழப்பு நேரிடும் பொழுது, அதுவும் நடுத்தர மற்றும் முதிய வயதில் இரண்டு கண்களிலும் பார்வை பறிபோகும் நிலை மிகவும் துயரமான ஒன்று.

ஓரிரு நாட்களுக்கு முன்பாக 55 வயது பெண்மணி ஒருவரை அவரது கணவர் அழைத்து வந்தார். ‘‘இவங்களுக்கு எட்டு மாசத்துக்கு முன்னாடி காசநோய் இருந்துச்சு. டிபி மாத்திரையை ஆரம்பிச்சு ஒரு மாசத்துல கண் பார்வை கோளாறு வந்தது. ஆபரேஷன் பண்ண வேண்டியதா இருக்கும் போல, ரெண்டு நோயையும் சேர்த்து எப்படி பார்க்கிறது. அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டோம். டிபி மாத்திரை ஆறு மாசம் முடிஞ்சப்ப போய் செக் பண்ணினோம்.

கண் நரம்பு தேஞ்சுடுச்சு, இனிமே பார்வை வராதுன்னு சொல்லிட்டாங்க” என்றார். காசநோய் கண்களையும் பாதிக்கக்கூடும், ஆனால் அதற்குரிய அறிகுறிகள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. காசநோய்க்கான கூட்டுமருந்து சிகிச்சையில் கொடுக்கப்படும் Ethambutol என்ற ஒரு மாத்திரைக்கு சிலருக்கு கண்ணின் முக்கிய நரம்பில் ஒருவித எதிர்வினை ஏற்படலாம் (Retrobulbar neuritis). மாத்திரை ஆரம்பித்த புதிதிலேயே அதற்கான அறிகுறிகள் தெரிந்திருக்கும். அந்தத் தருணத்தில்  உடனடியாக பரிசோதனை செய்து அந்த குறிப்பிட்ட மருந்தை மட்டும் நீக்கிவிட்டு அதற்குப் பதில் வேறு மாற்றுமருந்து கொடுத்தால் கண் நரம்பின் பிரச்சனையை மேலதிகமாக பாதிக்காத அளவிற்கு சரி செய்து விடலாம்.

இந்தப் பெண்ணின் விஷயத்தில் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் பார்வை இழப்புக்கு காரணம் மாத்திரையின் பக்க விளைவாகவும் இருக்கலாம். அவருக்கு விரிவான பரிசோதனையை மேற்கொண்டதில் அவரது நரம்பு அதிகம் தேய்ந்திருந்தது தெரியவந்தது. இனிமேல் தெளிவான பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. எனவே அவரை பார்வையில்லாமல் இயங்குவதற்கான பயிற்சிகள் எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினேன். கூடவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறவும் பரிந்துரைத்து அனுப்பி

வைத்தேன்.

சர்க்கரை நோய், அதீத கொழுப்பு சத்தால் பாதிக்கப்பட்டவர்களும் திடீர் பார்வை இழப்புக்கு ஆளாகலாம். கண்ணிற்கு உயிர்ச்சத்துக்களை வழங்கக்கூடிய முக்கிய ரத்த நாளங்கள் (Central retinal artery occlusion) அடைத்துக்கொண்டால் திடீரென்று ஒரு கண்ணில் மட்டும் திரை விழுந்தது போன்ற தோற்றம் ஏற்படும். கண்ணிலிருந்து வெளியே செல்லும் திரையில் (central/branch retinal vein) அடைப்பு ஏற்பட்டாலும் இதே போன்ற நிலை ஏற்படலாம். அறிகுறி ஏற்பட்ட அரை மணி நேரத்திற்குள்ளாக மருத்துவ உதவியை நாடுபவர்களுக்கு உடனடியாக பார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. துரதிஷ்டவசமாக, பார்வையிழப்பு ஏற்பட்டு வெகு நேரம் கழித்தே பல நோயாளிகள் அதைக் கண்டுபிடிக்கின்றனர். வயது முதிர்வு, கூடுதலாக இருக்கும் வேறு சில உடல் பிரச்சினைகளால் நோயறிதலில் தாமதம் நிகழ்கிறது.

 விபத்துக்களில் ஏற்படும் காயங்கள் திடீர் கண்பார்வை இழப்புக்கு முக்கியமான காரணிகள். வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் அணிவது, மது போதையில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது, மிதமான வேகம் இவற்றால் இந்தக் காயம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் கோவிட் கிருமிகள் நம் உடல் ஆற்றிய எதிர்வினையால் உடல் முழுவதிலும் பல பகுதிகளில் ரத்த நாள அடைப்புகள் ஏற்பட்டன (thromboembolic episodes). அவற்றில் கண் பிரச்சனையும் முக்கியமானது.

 சில மாதங்களுக்கு முன்பாக 21 வயது இளைஞன் ஒருவனை சந்தித்தேன். அவனுக்கு அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக லேசான காய்ச்சல் தொண்டை வலி இருந்திருக்கிறது. கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்ததால் சுய மருத்துவம் செய்ததோடு நிறுத்திக் கொண்டான். ஒருமுறை வலது கண்ணில் தூசி விழுந்தது, அதை மூடிக்கொண்டு இடது கண்ணால் பார்க்கும் பொழுது தான் எனக்கு இடது கண் பார்வையில்லை என்பதே  தெரிகிறது என்றான் அவன். பரிசோதித்துப் பார்க்கையில் கண்ணுக்கு செல்ல வேண்டிய முக்கிய ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு கண்ணின் பார்வை நரம்பு முழுவதுமாக செயலிழந்து காணப்பட்டது. அவனுக்கு காய்ச்சல் வந்த சமயம் கொரோனா மூன்றாவது அலை முடியும் தருவாயில் இருந்த நேரம். இந்த கண் பிரச்சனைக்கு மூல காரணமாக கோவிட் தொற்று இருந்திருக்கக் கூடும்.

தூரப்பார்வைக்காக கண்ணாடி அணியும் நபர்கள் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்குச் செல்லும் போது, ‘‘பார்வை வட்டத்தில் ஆங்காங்கே திட்டுக்கள் போல தெரிந்தாலோ, திரை விழுந்தது போல் தெரிந்தாலோ உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்” என்று மருத்துவர் கூறி இருப்பார். இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு வரக்கூடிய பிரச்சனை ‘விழித்திரை விலகல்’ (retinal detachment).

நம் விழித்திரையானது மடித்து வைக்கப்பட்ட புடவையைப் போல ஒன்றின் மேல் ஒன்றாக பத்து அடுக்குகளைக் கொண்டது. இதில் இரண்டு அடுக்குகள் ஒன்றிலிருந்து ஒன்று விலக நேர்ந்தால் குறிப்பிடத் தகுந்த பார்வை இழப்பு ஏற்படும். ஓரிரு நாட்களுக்குள்ளாக மருத்துவமனைக்குச் சென்று பொருத்தமான அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டால் முழு பார்வையும் மறுபடி கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. விழித்திரை விலகல் பிரச்சனையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்பு அந்த முழு கண்ணுமே ஊட்டமிழந்து, பின்பு சுருங்கிப் போய் பார்ப்பதற்கே வித்தியாசமாக தோன்றும் நிலை ஏற்படலாம்.

நான் கண் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. நரம்பியல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு அறுபது வயதுப் பெண்மணிக்கு திடீரென்று காலையில் எழுந்திருக்கும் பொழுது இரண்டு கண்களும் தெரியவில்லை. இன்னும் விடியவில்லை என்று நினைத்து மீண்டும் மீண்டும் படுத்து உறங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். பகல் 11 மணியைப் போல உறவினர்கள் அவரை எழுப்பி விபரம் கேட்க அப்போதுதான் இரண்டு கண்களிலும் பார்வை இல்லை என்பதே தெரிந்திருக்கிறது. வேறு பல நோய்களுக்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்ததால் மனநலம் தொடர்பான ஒரு பிரச்சனையாக (hysterical blindness) இருக்குமோ என்று நரம்பியல் நிபுணர்கள் முதலில் நினைத்திருக்கின்றனர்.

அத்தகைய பிரச்சனை எதுவும் இல்லை என்று அவருக்கு ஏற்பட்டிருப்பது cortical blindness என்னும் அபூர்வமான நோய் என்பது தெரிந்தது. இதற்குக் காரணம் மனித மூளையின் பின்பகுதியில் பார்வைக்காக இருக்கும் பகுதியின் பாதிப்பு. அந்தப் பகுதியிலுள்ள ரத்த நாளங்கள் அடைத்துக் கொள்வது, காயம், வலிப்பு நோய், சில வகை தொற்றுக்கள் இவை காரணமாக இருக்கலாம். பரிசோதனையின் போது அவருடைய கண்கள் மிக நன்றாகவே இருந்தன. எந்தக் குறைபாடும் காண முடியவில்லை ரத்த நாள அடைப்பை சீர் செய்வதற்கான சிகிச்சைகளை அவருக்கு அளித்தோம். இருந்தும் ‘கோல்டன் ஹவர்’ என்று சொல்லக்கூடிய முக்கியமான நேரத்தை அவர் கடந்து விட்டதால் மீண்டும் பார்வையை அவரால் பெற முடியவில்லை.

மூளைப் பகுதியில் ஏற்படும் பலவகை கட்டிகளும் பார்வையிழப்பிற்குக் காரணமாக அமையலாம். பார்வை நரம்பு துவங்கும் இடத்தில் தொடங்கி மூளையில் பார்வைக்கான பகுதி வரையில் சமிக்ஞைகளைக் கடத்தும் நரம்புகள் (neurons) பெரிய சாலையைப் போன்றவை (visual pathway). அந்தப் பாதையில் எந்த இடத்தில் கட்டிகள் தோன்றினாலும் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். அறிகுறிகளை வைத்தும் எளிய பரிசோதனைகள் மூலமாகவும் பாதிக்கப்பட்ட இடத்தைக் கண்டறியலாம். பின் அதை எளிதில் அறுவைசிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கள்ளச்சாராயம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த காலங்களில் மக்கள் அருந்தும் மதுபானத்தில் மீத்தைல் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தால் அது உடலில் கலந்து உருமாற்றம் அடையும் பொழுது வெளியாகும் வேதிப்பொருட்களால் கண் நரம்பு பாதிக்கப்பட்டு நிரந்தரப் பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்றளவும் கூட உலகில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

 மேற்கூறிய காரணிகள் அனைத்தும் வலி இல்லாமல் பார்வையிழப்பை மட்டும் ஏற்படுத்துபவை. இது தவிர கண்ணழுத்த நோய், கிருஷ்ண படலம் மற்றும் விழிப்படிக நீர்மம் பகுதியில் ஏற்படும் அழற்சி இவற்றில் பார்வை இழப்புடன் சிவப்பு, வலி, நீர் வடிதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்து காணப்படும்.

கண்ணிழந்தார் பெற்றிழந்தார் என்று சொல்வதைப் போல முந்தைய மணித்துளி வரை சாதாரணமான பார்வையைக் கொண்டிருந்த நபருக்கு திடீரென்று பார்வை பறிபோகும் சூழலை சமாளிப்பது மிகக் கடினம். முறையான பரிசோதனை, பிற நோய்களுக்கான முறையான சிகிச்சை, விழிப்புணர்வு, உடனடி மருத்துவ ஆலோசனை இவை மூலம் கண்பார்வைக்கு எமனாகும் காரணிகளை நம்மிடமிருந்து எட்டி நிறுத்த முடியும்!

Related Stories: