×

டீடாக்ஸ் டயட்

நன்றி குங்குமம் டாக்டர்

நாம்  தினசரி  எடுத்துக் கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து  டீ, காபி,  பானங்கள்,  நொறுக்குத் தீனிகள் போன்றவற்றையும்  சாப்பிடுகிறோம். இவ்வாறு  நாம் எடுத்துக்கொள்ளும்  உணவுகளில்  உடலுக்குத்  தீங்கு  செய்யும்  நச்சுகளும்  கலந்திருக்கிறது.  எனவே, சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு உடலில் சேரும் நச்சுகளையும்  கழிவுகளையும் அகற்றுவதும் முக்கியம்.

இந்த குடல் கழிவுகளை வெளியேற்ற நாம் இயற்கையான உணவுகளையே மருந்தாகப் பயன்படுத்தலாம். அவைதான் டீடாக்ஸ் உணவுகள் என்று  கூறப்படுகின்றன. இந்த டீடாக்ஸ் உணவுகள்,  கொழுப்புச்சத்து, மாவுச்சத்து நிறைந்த உணவுகளால் வயிற்றுக்கு உண்டாகும் பாதிப்பை தடுக்கிறது. மேலும்,  உணவு குடலில் உள்ள அசுத்தங்களை நீக்கி, செரிமானத்தையும் எளிதாக்க உதவுகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

வைட்டமின் சி சத்து அதிகமுள்ள எலுமிச்சை டீடாக்ஸ் உணவு வகைகளில் முக்கியமானது. எலுமிச்சை சாற்றை காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர்ல கலந்து குடிப்பது மிகவும் நல்லது. இதனால் இரவு சாப்பிட்ட உணவில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அகற்றப்படும்.  இரவில்  மது அருந்துவதினால், காலையில் ஏற்படும் அஜீரண கோளாறு, வயிற்றில் வாயு சேர்தல் ஆகியவற்றைத் தடுக்க இஞ்சி உதவும். இஞ்சியைத் தேநீரில்  கலந்து குடிக்கலாம்.

ரத்தத்தில் உள்ள கெட்ட  பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான்களை பூண்டு எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. மேலும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்யவும் பூண்டு உதவும். மெக்னீசியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி சத்துகள் அடங்கிய பீட்ரூட் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும். இதன் மூலமாக ரத்த செல்களில் தரம் அதிகரிக்கும்.

பிரவுன் நிற கவுனி அரிசி வெள்ளை அரசியைக் காட்டிலும் உடலுக்கு நல்லது. இதில் உடலுக்குத் தேவையான மாங்கனீஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுக்கள் அடங்கியுள்ளன. ரத்தத்தில் சேர்ந்துள்ள அசுத்தங்களை சுத்தம் செய்து உடலை புத்துணச்சியுடன் வைக்க கவுனி அரிசி உதவுகிறது.

தொகுப்பு : தவநிதி

Tags :
× RELATED அஜீரணம் 5 காரணங்கள்!