×

அரியலூர் மாவட்டத்தில் அரசு பணியாளர் பணி விபரம் முழுமையாக கணினி மயம்

அரியலூர், ஜூன் 13:  அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்களின் பணி வரலாறு முழுமையாக கணினி மயமாக்கப்படும் என்று கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் கூறினார்.அரியலூர் மாவட்டம், விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு தலைமை தாங்கி கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் பேசும்போது கூறியதாவது:மாநில அரசின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூல பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினை செயல்படுத்தக்கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும், மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவடைந்துள்ளன. அத்துடன், இதனை முறைப்படுத்துவதன் மூலம் மாநிலம் முழுவதிலும் இருந்து நேரடி இணையத்தின் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். இதில் அரசின் வரவு குறித்து உடனுக்குடன் அறிந்து ெகாள்ளலாம்.

இத்திட்டத்தின்படி எண் ஒப்பம் மற்றும் விரல்ரேகை பதிவின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் மாநிலத்தின் நிதிநிலை குறித்த தகவல்கள் உடனுக்குடன் அரசுக்கு கிடைப்பதுடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தேவையற்ற காலதாமதம், முறைகேடுகள் தவிர்க்கப்படும்.இத்திட்டம் மூலமாக 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணி பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறுவது வரையிலான பணி வரலாற்றினை முழுமையாக அனைவரும் கணினி மூலம் ெபறலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில் கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED செட்டிகுளத்தில் மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி சுவாமி திருவீதியுலா