×

COPD அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலகில் அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு   முக்கியமான எட்டுக் காரணங்கள் ஹார்ட்  அட்டாக்,  மூளை செயலிழத்தல் (ஸ்ட்ரோக்), சிஓபிடி, கேன்சர், அஸ்துமா,  டிபி, நிமோனியா, சாலை விபத்துகள். இதில்,   மூன்றாவது  இடத்தில்  இருக்கும் சிஓபிடி குறித்து மக்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. இந்த நிலை நீடித்தால், சிஓபிடி முதலிடத்தில் வருவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, மக்கள் விழித்துக் கொண்டுதங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் நுரையீரல்  சிறப்பு மருத்துவர்  டி. ரங்கநாதன்.

சிஓபிடி  என்பது என்ன?

சிஓபிடி (Chronic obstructive pulmonary disease) என்பது  நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். சிலர்  இந்த  சிஓபிடியும்  இழுப்பு நோயான  ஆஸ்துமாவும் ஒன்று  என்று நினைக்கிறார்கள். ஆனால்,  இவை இரண்டும் வெவ்வேறான நோய்கள். இந்தியாவில் 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, எட்டில் ஒருவர் சிஓபிடியினால்  மரணமடைகிறார்கள் என்கிறது ஆய்வு.

இந்தியாவைப்  பொறுத்தவரை நாற்பது வயதை கடந்தவர்களில் நூற்றுக்கு 10-20 பேருக்கு  சிஓபிடி பாதிப்பு இருக்கிறது.  அந்த வகையில் ஒன்றிலிருந்து  இரண்டு கோடி  மக்கள்  ஏற்கெனவே  சிஓபிடியால்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்குக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிஓபிடிக்கு யாரும் கொடுப்பதில்லை. காரணம், சிஓபிடி குறித்த  விழிப்புணர்வு  இங்கு மிகவும்  குறைவாக இருப்பதுதான்.

சிஓபிடி எதனால்  ஏற்படுகிறது  புகைப்பிடிப்பதும், சுகாதாரமற்ற காற்றைச் சுவாசிப்பதும் பல நாட்கள் நிகழும்போது நாளடைவில் அது நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தி  பாதிக்கச் செய்வதினால் சிஓபிடி வருகிறது. இது பெரும்பாலும் நடுத்தர வயதிலும், முதிய வயதிலும் வரக் கூடியது.  

காற்று மாசினால் சிஓபிடி எவ்வாறு பாதிக்கிறது..

காற்றுமாசு என்று பார்க்கும்போது, இரண்டு வகையான  காற்றுமாசு இருக்கிறது. ஒன்று  வெளிப்புறக் காற்று மாசு, மற்றொன்று,  உட்புறக் காற்று மாசு.
வெளிப்புறக் காற்று மாசு  எனும்போது, பணியிடத்தில்  ஏற்படும் மாசு, தொழிற்சாலைகள்  ஏற்படுத்தும் புகை, வாகனங்களால்  ஏற்படும் புகை,   அருகில் இருப்பவர்கள் புகைப்பதனால் ஏற்படும் புகை போன்றவைகளாகும். உதாரணமாக ஒரு பணியிடத்தில்  ஐந்து பேர் வேலைபார்த்தால், அதில் நாலு பேர் புகைப்பவர்கள்  என்றால்,  அந்த  ஐந்தாவது நபர்  புகைப்பவர்களின் அருகில்  இருப்பதனால் அவருக்கும் சிஓபிடி  ஏற்படும்.

சிஓபிடியினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது   வாழ்நாளில்  இரண்டரை  ஆண்டுகள்  குறைந்து விடுகிறது.  அதாவது, ஒருவருக்கு 68 வயது வரை  வாழ்நாள் இருக்கிறது என்றால், அதில் இரண்டரை ஆண்டுகள்  (30 மாதம்) குறைந்து 66 வயதிலேயே அவர்  மரணிக்க நேரிடும்.அடுத்தது உட்புற மாசு, இன்றளவும் கிராமப்புறங்களில்  பெரும்பாலான வீடுகளில்  விறகு மற்றும் கரி அடுப்புகளில்தான் சமைக்கிறார்கள். அந்த புகையினால் ஏற்படும் மாசு. இந்தவகை மாசினால்  அதிகம் பெண்களே  பாதிக்கப்படுகின்றனர்.  இதிலிருந்து தப்பிக்க  எல்.பி.ஜி. கேஸ் வந்தது மிகப் புரட்சி என்றே சொல்லலாம். அதே சமயம்,  இந்தியாவை பொறுத்தவரை எல்.பி.ஜி இன்னும்  நூறு சதவிகிதம்  முழுமையடையவில்லை என்பதுதான் உண்மை.

அடுத்து  வீட்டில் உள்ள  ஒருவர்  உள்ளேயே  புகைப்பிடிப்பதனால், அதை சுவாசிக்கும் வீட்டில்  உள்ள  மற்றவர்களும் புகையிலையின் புகையினால்  பாதிக்கப்படுகிறார்கள். இதைதவிர்த்து வெளிப்புறம் மற்றும் உள்புறமாசு என்று  எடுத்துக்கொண்டால், டயர் நிறுவனங்கள், ரப்பர் நிறுவனங்கள், ரசாயன நிறுவனங்கள்,  சுத்திகரிப்பு நிலையங்கள், ஸ்டெர்லைட் போன்றவை வெளியிடும் புகைகள் வெளிப்புற மற்றும் உள்புற  மாசை  ஏற்படுத்தக்கூடியவைகளாகும்.

அடுத்தபடியாக ஜெனடிக் எனும் பரம்பரை வழியாக  வருவது. இவர்களுக்கு  பிறப்பிலேயே  நுரையீரல் பலவீனமாக  இருக்கும்.  அது தெரியாமல்  இவர்கள்,  புகைபிடிப்பது,  மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில்  பணிபுரிவது, சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பது  போன்றவை  செய்யும்போது,  இவர்கள்  சிஓபிடியினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில்,  உலகளவில் 600 கோடி  மக்கள்  சிஓபிடியினால்  பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இந்தியாவில் மட்டும்  8 லட்சம்  பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு தனிநபர்  ஒரு பாக்கெட்  சிகரெட்  வாங்கும்போது,  அதில்  பல மடங்கை சிஓபிடிக்கு  செலவுசெய்கிறார்.  புகைப்பதினால்  ஏற்படும்  சிஓபிடியால் பாதிப்பவர்களுக்கு  நிமோனியா வருவதும் பொதுவானது.

இந்த நூற்றாண்டே நுரையீரல் நோய்களின் நூற்றாண்டு என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது.   நாம் சமீபகாலமாகவே  சுகாதாரமற்ற காற்றைத்தான் சுவாசித்து வருகிறோம், மேலும், வாகனப் புகைகளின்   மாசும் அதிகரித்துவிட்டது. இவைகள்தான், கொரோனா போன்ற நோய்களின் ஆரம்பம்.

சிஓபிடியின் அறிகுறிகள் என்னென்ன?

மூச்சு வாங்குதல் (சிறு சிறு வேலைகள்  செய்தால்கூட மூச்சு வாங்குதல்),  நாள்ப்பட்ட  சளி,  தொடர் இருமல் இவைகள் தான்  முக்கியமான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இதைத்தவிர,  தசை  பலவீனம்,  சோர்வு, ரத்தசோகை போன்றவைகளும்  இருக்கும். இது  கடைசியாக  இருதயத்தை  பலவீனமாக்கி  இருதய நோய்களை  உண்டாக்கிவிடும் அபாயமும் உண்டு.

பரிசோதனைகள்

எக்ஸ்ரே,  ஈசிஜி, நுரையீரல் திறன் பரிசோதனைகள்  இவைகள் மூலம்  சிஓபிடி பாதிப்பை கண்டறியலாம்.  

தீர்வுகள் மற்றும் தற்காப்பு என்னென்ன?

சிஓபிடியைப் பொருத்தவரை  மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்தில்லா  மருத்துவமும் அளிக்கப்படுகிறது.  
மருந்து மாத்திரைகள்  என்று எடுத்துக் கொண்டால்,  நேரடியாக  மூச்சுக்குழாய்க்கு  செலுத்தக்கூடிய  இன்ஹேலர்ஸ்  (உறியக் கூடிய  மருந்துகள்)  மற்றும்  மூச்சுக்குழாய்  அடைப்பை சரி செய்யும்  மாத்திரைகளை  தொடர்ந்து எடுத்துக் கொள்வதன்  மூலம்  சரி   செய்யலாம்.மருந்தில்லா மருத்துவத்தில், சிஓபிடியினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  குரூப் தெரபி பரிந்துரைக்கப்படுகிறது.   ஏனென்றால்  இவர்கள்  மனதளவில்  சோர்ந்துவிடுவார்கள். எனவே, கவுன்சிலிங், மோட்டிவேஷன்,  பிசியோதெரபி இவையெல்லாம் குரூப்  தெரபியில்   கொடுக்கப்படும். இவையெல்லாம்  சிஓபிடியால்  பாதிக்கப்பட்டிருக்கும்  தனி நபருக்கான சிகிச்சைகள்.

சமூக அளவில்   தீர்வு  வேண்டும் என்றால்,  புகைபிடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வுகளை  ஏற்படுத்த வேண்டும்.  அதிலும் சமீபகாலமாக   ஆண்களுக்கு இணையாக பெண்களும் புகைபிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, பெண்கள்  புகைப்பதை உடனடியாக நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், ஒரு கர்ப்பிணிப்பெண் புகைபிடித்தால், அவர்  ஒரு ஆரோக்கியமற்ற  குழந்தையைத்தான் பிரசவிப்பார். இதனால்  அந்தக் குழந்தை  அதன் வாழ்நாள்  முழுவதும்   நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்.

அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது  பழைய வாகனங்களை  அப்புறப்படுத்துவது.  அதிலும்  குறிப்பாக  சொல்ல வேண்டும் என்றால்  அரசு  அலுவலகங்களில்  இயங்கிவரும் பழைய  வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.  இதுபோன்ற பழைய வாகனங்கள்தான்  அதிகளவிலான   புகையை   வெளித் தள்ளுகிறது. அடுத்து  தொழிற்சாலைகளில்   அடைப்பு  அதிகமில்லாமல்  காற்றோட்டமான சூழலை  உருவாக்க வேண்டும். எல்.பி.ஜியை நூறு சதவிகிதம் முழுமையாக்க வேண்டும்.  இவையெல்லாம்   சிஓபிடி  வராமல்  தற்காத்துக்கொள்ள  உதவும்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Tags :
× RELATED சிறுநீரகக் கற்களுக்கு ஆயுர்வேதத் தீர்வு!