மகளிர் நலம்… மாதவிடாய்த் தீர்வுகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

நேரத்தைக் குறைக்கவும், சுலபமானது என நாம் செய்யும் செயல்களால் நாம் இழப்பது. ஆரோக்கியத்தை. அதுவும் சின்ன அளவில் பெரிய உடல் மாற்றத்தையும் தொந்தரவுகளையும் ஏற்படுத்திக்கொள்கிறோம். இதற்கு ஹார்மோன் மாத்திரைகள் என்றும் தீர்வாகாது. ஹார்மோன்களையே தன் வழிக்கும் கொண்டு வரும் உணவுப் பழக்கமும், வாழ்வியல் பழக்கமும் சித்த மருத்துவத் தத்துவத்தில் மிக ஆழமாகச் சொல்லப்படுகிறது. பெண்களின் முக்கியப் பிரச்சனைகளான மாதவிடாய் தொடர்பான அனைத்து தொந்தரவுகளுக்கும் தீர்வு காணலாம்… மிக எளிமையாக…

விதவிதமான மாதவிடாய்த் தொந்தரவுகள்

பள்ளி மாணவிகளுக்குச் சீரற்ற மாதவிடாய்த் தொந்தரவு இருக்கிறது. முதன் முதலில் பூப்படைதல் நடைபெற்றபின், அதன் பிறகு ஒரு ஆண்டுகூட மாதவிடாய் வராமல் இருப்பதாகச் சொல்கிறார்கள். சில மாணவர்கள், 10 வயதிலேயே பூப்படைதல் நடந்துவிட்டு, ஒவ்வொரு 15 நாட்களுக்கு மாதவிடாய் வருவதாகவும் சொல்கின்றனர்.10வது-க்கு மேற்பட்ட பிள்ளைகள், படித்துப் படித்து டென்ஷன், ஸ்ட்ரெஸ்ஸுடன் இருப்பதால் அவர்களுக்கு மாதவிடாய் தாமதமாகிவருகிறது.

பெரும்பாலும் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாயின் போது அதீத வலி வருவதாகச் சொல்கிறார்கள். இதை டிஸ்மெனோரியா (Dysmenorrhea) என்பார்கள். திருமணமான பெண்கள்கூட மாதவிடாய்ச் சீரற்றதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மிகத் தாமதமாக வருகிறது.30 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு, ஹார்மோன்ஸ் உடலில் மாறுவதால், சிலருக்கு அதீத ரத்தப்போக்கு வருகிறது. சில பெண்களுக்குக் கர்ப்பப்பையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகச் சொல்கிறார்கள்.

45+ வயதினர், அதாவது மெனோபாஸ் பருவத்தில் உள்ள வயதான பெண்களுக்கு, மேற்சொன்ன பிரச்சனைகள் அனைத்துமே சேர்ந்துகூட வருகிறது. சிலருக்கு 2-3 தொந்தரவுகளாகவும் வருகிறது. இதில் என்ன பிரச்சனை என்றால் கர்ப்பப்பை சுருங்காதது. எனவே, ரத்தப்போக்கு நிக்காது.53+ வயதினர் பெண்களுக்குகூடச் சில மாதங்களில் ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

இயல்பு / இயல்பற்றது எது?

சிலருக்கு மாதவிடாய் வந்ததும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்றளவுக்கு இருக்கும். சிலருக்கு வாந்தி, மயக்கம், பேதி, காய்ச்சல், வலி எனப் பாடாய்ப்படுத்தும். இப்படி இருப்பதில் எது நார்மல் எனக் குழப்பமாக இருக்கும். பொதுவாகவே லேசான வலி வந்து மாதவிடாய் பட்டு, அதன் பிறகு எந்தத் தொந்தரவும் இல்லாமல் ரத்தப்போக்கு வரும். இது இயல்பானது. சிலருக்கு வலியே இல்லை எனச் சொன்னால், அதுவும் இயல்பானதுதான். சிலரின் உடல்வாகு தொந்தரவு இல்லாமல் ரத்தப்போக்கை வெளிப்படுத்தும்.

உதாரணத்துக்கு, கபம் உடல் கொண்டவர்களுக்கு, அதாவது கொஞ்சம் சதைப்போட்டபடி கொழுகொழு என உள்ளவர்களுக்கு, கர்ப்பப்பையைச் சுற்றி குஷன் போல இருக்கலாம். கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மை எளிதாக இருக்கலாம்.

இந்த மாதிரியான அமைப்பு கொண்டவர்களுக்கு, மாதவிலக்கின்போது பெரும்பாலும் வலியே இல்லாமல் இருப்பார்கள். அடுத்ததாக, பித்த உடல்காரர்களுக்கு, கர்ப்பப்பை கொஞ்சம் கடினமாக இருக்கலாம். கர்ப்பப்பை சுருங்கி விரியும்போது, பக்கத்தில் உள்ள சிறுநீர் பை போன்றவைகூட இழுத்துப் பிடிக்கும். அப்போது, வலி அதிகமாக இருக்கும்.

அதைவிட வாத உடல்காரர்களுக்கு, கர்ப்பப்பை உலர்ந்து காணப்படும். பிழிந்து எடுப்பது போல வலி இருக்கலாம். இந்த வகை உடலினர் ரொம்பவே துவண்டு போய்விடுவார்கள். உருண்டு, பிரண்டு புரளும் அளவுக்கு வலி இருக்கலாம்.

உங்கள் உடல்… பித்தமா, வாதமா, கபமா?

பித்த உடல்காரர்கள், சிவப்பு நிறமாகவும், பளபளப்பான சருமத்தினராகவும் இருக்கலாம். முடி செம்பட்டை நிறமாக இருக்கும். வெகு சீக்கிரமே கோபம் வரும் குணம் கொண்டவர்கள். உற்சாகமாக இருப்பார்கள். பித்த நரை தொல்லையும் இருக்கும்.

வாத உடல்காரர்கள், ரொம்பவே உற்சாகத்துடன் காணப்படுவார்கள். உதாரணமாகச் சொன்னால், அப்துல் கலாம் ஐயா போல. ஐந்து நிமிடம் கூட ஒரு இடத்தில் உட்கார மாட்டார்கள். துறுதுறுவென இருப்பார்கள். அவர்களின் மைண்ட் ஒரு நிலைக்கே வராது.

அடுத்தது என்ன, என்னவென்று பரபரப்பாக இருப்பார்கள். கப உடல்காரர்கள், கொஞ்சம் குண்டாக இருப்பார்கள். உடல் எடை அதிகரித்தவராக இருக்கலாம். மெதுவாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். பொறுமை, அமைதியாக இருப்பார்கள்.

மாதவிடாய் தொந்தரவுக்கு என்ன தீர்வு?

எந்த உடல் வகையினராக இருந்தாலும், கர்ப்பப்பை அதற்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்து கொடுக்கும். இருப்பதிலேயே 18-25 வயதுக்குள்தான் அதிக அளவு வலி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், காலை உணவு எடுப்பதில்லை. சரியான சத்துள்ள உணவு சாப்பிடாமல் இருப்பதும் ஒரு காரணம். காலை உணவு, சத்தான ஆகாரமாக இருப்பது முக்கியம். ஆதலால், உடலில் உள்ள 7 தாதுக்களான,

1. சாரம் - (சாறு)

2. செந்நீர் (அரத்தம்)

3. ஊன் (மாமிசம்)

4. கொழுப்பு

5. எலும்பு

6. மூளை

7. சுக்கிலம் (விந்து, சுரோணிதம்)

இதில் சுக்கிலம் என்பது 7வது படிக்கட்டில் நிற்கிறது. 6 படி க் கட்டை தாண்டி 7வது படிக்கட்டுக்கு நாம் உண்ணும் உணவின் சத்துகள் போய்ச் சேரவேண்டும். ஆனால், நாம் உண்ணும் உணவு முதலாவது படிகட்டான ‘சாரத்துக்கே’ பற்றாகுறையாக இருப்பதால் 7வது படிக்கட்டின் நிலைக்குச் சத்துகள் செல்வதில்லை. இதனால், இனப்பெருக்க உறுப்புகள் உலர்ந்துபோகிறது.

சீரற்ற இயக்கத்தில் இருப்பதில்லை. ஆதலால் மாதவிடாய் சமயத்தில் உடலமைப்புக்குத் தகுந்தது போலத் தொந்தரவுகளைத் தருகிறது. பக்கத்தில் உள்ள பெருங்குடல், சிறுநீர்ப் பை என அனைத்து பக்கத்து உறுப்புகளையும் சேர்த்துப் பிடித்துச் சுருங்கிப்போகிறது.

இதனால், கர்ப்பப்பை சுருங்குகின்ற வலியைவிடச் சிறுநீர்ப் பை சுருங்குவதால் ஏற்படும் வலி கொடுமையானதாக அமைகிறது. வலி அதீதமாகிறது. அதனால்தான் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தால், கொஞ்சம் நன்றாக உணர்வது போலச் சொல்கிறார்கள். இடுப்பில் எண்ணெய் தேய்த்துவிட்டால் கொஞ்சம் லேசானதாக மாறுகிறது. சின்னதாக மென்மையான மசாஜ் கொடுத்தாலும் வலி குறைகிறது.

உடல் சூடு…

ஒரு எரிமலையை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நடுப்பகுதி நெருப்பு கக்கி தூக்கி எறியும். அதேபோல மனித உடல், நாம் உட்கார்ந்து, உட்கார்ந்து பழகிய வாழ்வியலால் கீழே போகவேண்டிய சூடு, மேலே போகிறது. இந்த உடல் சூடுதான். நோய்களை உருவாக்குகிறது. ஹார்மோன்ஸ் சுரக்கின்ற பிட்யூட்டரி சுரப்புகள் சூட்டால், பொசுங்கிப் போகின்றன.

ஆதலால், ஹார்மோன்ஸ் தொடர்பான நோய்கள் அதிக அளவில் வருகின்றன. நகரம்விடக் கிராமத்தினருக்கு ஸ்ட்ரெஸ் குறைவு. இந்தச் சூடு, மனஅழுத்தம் காரணமான ஹார்மோன் நோய்கள், அதற்குத் தொடர்பான முடி கொட்டுதல், முன்நெற்றி எழுதல், முடி மெலிந்து காணப்படுதல், இடுப்பு, வயிறு பெரிதாக மாறிப் போதல்.

தலை முதல் கால் வரை, கை, கால், தோள்பட்டை, அனைத்து மூட்டுக்களுக்கும் 5 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்தால், நடு மையத்தில் நெருப்பு போல கொப்பளிக்கும் சூடு, பல இடங்கள் பரவி நம் உடல் அசைவினால் வெளியேறிவிடும். 5 நிமிடம் செய்தாலே உடல் சூடு குறைந்துவிடும். பின்னர், நீங்கள் உட்கார்ந்து எழுந்து சீட்டைத் தொட்டு பார்த்தால், அந்த இடத்தில் சூடு தெரியாது. 5 நிமிடத்திலே உடல் சூட்டைக் குறைக்க உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் எளிமையான ‘வார்ம்- அப்’ பயிற்சிகள் செய்யவேண்டும்.

அசைவுகளிலும், வியர்வையிலும் சூடு வெளியேறிவிடும். இப்போது உடலின் நடுப்பகுதி குளிர்ச்சியாகிவிடும். நடுப்பகுதி நன்றாக இருந்தால் கர்ப்பப்பை தொடர்பான பெண் உறுப்புகள், ஆண் இனப்பெருக்க உறுப்பு, இதயம், குடல், வயிறு போன்ற முக்கிய உறுப்புகளின் இந்த நடுமையத்தைச் சேர்ந்தே இருக்கிறது. அல்சர் தொல்லையும் எதுக்களித்தலும் நீங்கும்.

தலைவலி, நடு மண்டை வலி, மூக்கடைப்பு, தொண்டைவலி போன்ற எந்தத் தொல்லைகளும் வராது. வியர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தாலே இந்த உடலின் மெட்டபாலிக் சூட்டை நீக்கலாம். இந்தச் சூட்டை உடல்தான் உருவாக்கும். இதை வெளிப்படுத்திவிட்டால் எந்தத் தொந்தரவும் இருக்காது. உடற்பயிற்சி, உடலுழைப்பே இந்தச் சூட்டை கரைக்கும்.

அடிக்கடி ஆறு, குளம், வாய்க்கால் போன்றவற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தால், உடல் சூடு வெகுவாகக் குறையும். நகரத்துவாசிகள் ஸ்விம்மிங் பூல், பாத் டப்பில்லாவது 20 நிமிடங்கள் வரையாவது இருப்பது நல்லது. உடல் சூடு காணாமல் போகும். உடல் உருவாக்குகின்ற மெட்டபாலிக் சூடு நீங்கும். குழந்தையின்மையால் பாதித்த பெண், ஆண்களுக்கு, ஆற்றில் குளிக்கச் சொல்வதே முதல் சிகிச்சைதான். சிகிச்சைக்காக வந்தவருக்கு 1 மில்லியன் விந்தணுக்கள் மட்டுமே இருந்தன.

ஆற்றில் தொடர்ந்து குளித்து வர சொல்லி, இட்லி, தோசை அதிகம் எடுக்க வேண்டாம் எனச் சொல்லி, அவரும் அதை செய்து 3 மாதத்திலே அவருக்கு விந்தணுக்கள் போதிய அளவுக்கு கூடி அவரது மனைவியும் கருவுற்றிருந்தார். அந்த ஆணுக்கு 60 மில்லியன் விந்தணுக்கள் கூடிவிட்டது. நீர் சிகிச்சை, இயற்கை கொடுத்த வரம்.

மீன் தொட்டியின் மீன்களுக்குத் தண்ணீர் சுத்தமாகவும், ஆக்ஸிஜன் தேவையான அளவு, உணவும் இருக்க வேண்டும். அதுபோல ஆண்களின் விந்தணுக்களுக்குப் போதிய ஆக்சிஜன், சத்து இருக்க வேண்டும். அடிக்கடி சளி பிடிக்காத, மூக்கடைப்பு இல்லாத, உடல் சூடு இல்லாமல் இருக்க நீர் சிகிச்சை உதவும். உடல் குளிர்ச்சியாகி சளி வெளியேறிவிடுகிறது. இதெல்லாம் ஆற்றில் கிடைக்கிறது.

தொகுப்பு : ப்ரீத்தி

Related Stories: