புர்சிடிஸ் மூட்டுவலிக்கான ஆபத்து!

நன்றி குங்குமம் டாக்டர்

மூட்டுகளில் வலி ஏற்படுவது இன்று நாள்தோறும் அதிகரித்துவருகிறது. என்னவகை மூட்டு வலி என்பதைத் தெரியாமலேயே கடைக்குப் போய் ஏதேனும் ஒரு களிம்பை வாங்கித் தடவிக்கொண்டு அன்றாடத்தைக் கவனிக்கப் போவது ஒரு வழக்கமாகிவிட்டது. உண்மையில் மூட்டு வலிகள் அனைத்தும் ஒன்றல்ல. உதாரணமாக புர்சிடிஸ் மூட்டுவலியையே எடுத்துக் கொள்வோம்.

புர்சே (bursae) எனப்படும் மூட்டுகளைச் சுற்றியுள்ள சிறிய பகுதிகளில் ஏற்படும் வலிமிகுந்த நிலையே புர்சிடிஸ் (Bursitis) எனப்படுகிறது. தோள்பட்டை, முழங்கை, இடுப்பு போன்றவற்றைச் சுற்றியுள்ள மூட்டுகளில் ஒருவர் அடிக்கடி வலியை அனுபவித்தால், அவர்கள் புர்சிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.அருகருகே இருக்கும் இரண்டு மூட்டுகளுக்கு இடையிலான திரவம் நிறைந்த சிறிய பைதான் புர்சே.

உராய்வைத் தடுக்க மூட்டுகளுக்கு அருகிலுள்ள எலும்புகள், தசைகள் மற்றும் தசைநாண்கள் ஆகியவற்றுக்கு மென்மையான குஷன் போன்ற தன்மையைத் தருவதே இதுபோன்ற பைகளின் நோக்கம். ஆனால், சில நேரங்களில், இந்த பாதுகாப்பு பைகள் அதிகப்படி பயன்பாடு மற்றும் கூடுதல் அழுத்தம் காரணமாக வீங்குகின்றன, இது புர்சிடிஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும். நடுத்தர வயதிற்குப் பிறகு இது பொதுவானது, ஏனெனில் வயதாகும்போது புர்சேகள் இறுக்கமடைகின்றன. மேலும் தசைநாண்கள் அவற்றின் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து கிழிந்துவிடுகின்றன.

புர்சிடிஸ் ஆபத்துக் காரணிகள்

பொதுவாக குறிப்பிட்ட சில மூட்டுகள் தினசரி மீண்டும் மீண்டும் இயக்கப்படுவது, நிலையான அழுத்தத்தை உள்ளடக்கிய செயல்பாடுகளைச் செய்யும்போது ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் ஒரு மூட்டினை இயக்குவதும், அழுத்தத்தை அதிகரிப்பதும் புர்சிடிஸ் உருவாகும் ஆபத்தை அதிகரிக்கின்றன. இதனால், மேற்குறிப்பிட்ட வகையில் குறிப்பிட்ட செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு தொழிலில் ஈடுபடும் நபர் இந்த நிலைக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளது.

முடக்கு வாதம், கீல்வாதம், சர்க்கரை நோய் போன்ற பிற மருத்துவ நிலைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் இந்த நிலை தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம். அதிக எடையுடன் இருப்பது அல்லது உடல் பருமனால் அவதிப்படுவதும் இந்த நிலைக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. கடந்த காலக் காயம் அல்லது அதிர்ச்சி மற்றும் அழற்சிநிலை போன்றவற்றைக் கொண்டவர்களும் புர்சிடிஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் வலி மற்றும் விறைப்பான உணர்வு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பார்க்க வேண்டும், அது சிவப்புத் திட்டுகளுடன் வீங்கியிருக்கும்.

சிகிச்சைகள்

பொதுவாக புர்சிடிஸிற்கான சிகிச்சையானது பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு ஓய்வு அளித்து, மேலும் காயம் அல்லது அதிர்ச்சியிலிருந்து அவற்றைப் பாதுகாப்பதே. புர்சிடிஸிற்கான மருத்துவம் அல்லாத சிகிச்சையானது அதிகப்படி செயல்பாடுகளைத் தவிர்ப்பது, பாதிக்கப்பட்ட மூட்டுக்கு கூடுதல் ஓய்வு அளிப்பது, எந்த அழுத்தத்தையும் தவிர்க்க ஊன்றுகோல் அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

வலி கடுமையாக இருந்தால், மூட்டுகளில் பிரேஸ், பேண்ட் அல்லது ஸ்பிரிண்ட் போன்றவற்றில் ஒன்றை அணிந்துகொள்ளவும், ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி தற்காலிக நிவாரணம் பெறவும் மருத்துவர் பரிந்துரைக்கலாம். வலி நீண்ட காலம் நீடித்தால், புர்சே திரவத்தில் தொற்று இருக்கிறதா என்று மருத்துவர் பரிசோதிப்பார். இதை அறிவதற்காக ஒரு ஊசி மூலம் திரவத்தை வெளியே எடுத்துப் பார்ப்பார்.

ஒரு குறிப்பிட்ட மருந்தினால் ஏற்படும் எதிர்வினை அல்லது எரிச்சல் காரணமாக சிலநேரங்களில் புர்சிடிஸ் நிலை ஏற்படுகிறது. வலி மீண்டும் வராமல் இருக்க இதற்கான சாத்தியங்களை முதலில் களைய வேண்டியது அவசியம். இந்த நிலை மூட்டுகளை முடக்குவதற்கு வழிவகுத்தால் பாதிக்கப்பட்ட மூட்டினை நகர்த்த இயலாத வகையில் வீக்கம், தடிப்பு, மூட்டு உராய்தல், அதிக காய்ச்சலுடன் சுருக் சுருக்கென வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது, இது மூட்டுகளுக்கு சிகிச்சை தேவை என்பதை உணர்த்துகிறது. இந்த நிலையில் மருத்துவரை உடனே சந்தித்தாக வேண்டும்.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related Stories: