தோல் புற்றுநோய்... தடுப்பது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவர் என்னிடம் தோல் நோய்க்காக சிகிச்சைக்கு வந்தார். அவருக்குத் தொடையில் பல வருடங்களாக ஒரு மச்சம் இருந்திருக்கிறது. இதுநாள் வரை அது எந்தப் பிரச்னையும் செய்யவில்லை. இப்போது சில வாரங்களாக அது பெரிதாக வளர்ந்திருக்கிறது. கொஞ்சமாக அதன் நிறமும் மாறியிருக்கிறது. அதற்காகக் குடும்ப மருத்துவர் என்கிற முறையில் என்னிடம் வந்திருந்தார்.

அவரைப் பரிசோதித்துவிட்டு, ‘நீங்கள் ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவது நல்லது’ என்றேன். அவர் ‘ஏன், டாக்டர், நீங்கள் பார்க்க முடியாதா?’ என்று கேட்டார். ‘உங்களுக்குத் தொடையில் வந்திருப்பது புற்றுநோயாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்’ என்றேன்.அவருக்கு நான் அப்படிச் சொன்னது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும்

இருந்திருக்க வேண்டும். ‘தோலிலும் புற்றுநோய் வருமா, டாக்டர்?’ என்று கேட்டார். ‘ஆமாம்!’ என்றேன்.

 நம்மில் பலருக்கும் தோலிலும் புற்றுநோய் வரும் என்கிற விஷயமே தெரியாமல் இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அவர்களின் தோலின் நிறம் மற்றும் தன்மை காரணமாகத் தோல் புற்றுநோய் வருவது அதிகம். ஆனால், இந்தியர்களுக்கு தோல் புற்றுநோய் அந்த அளவுக்கு வருவதில்லை என்பதால் அது குறித்த விழிப்புணர்வு குறைவு. ஆகவேதான் இந்தக் கட்டுரை.

தோல் புற்றுநோயை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் உங்களுக்குத் தோல் குறித்த புரிதலைக் கொஞ்சம் கடத்த வேண்டும்.

உடலின் கவசம்

உடலைப் போர்த்தியிருக்கும் தோல்தான் உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு.  உடலின் எடையில் சுமார் 15 சதவீதம் தோலின் எடை. அறுபது வயதுடைய ஒருவரின் தோல் மொத்தத்தையும் விரித்தால், அது 2 சதுர மீட்டர் பரப்பாக இருக்கும். இதன் தடிமன் இடத்துக்கு இடம் மாறுபடும். சில இடங்களில் ஒன்றரை மில்லி மீட்டர் மெல்லியதாகவும், வேறு சில இடங்களில் 6 அல்லது 7 மில்லி மீட்டர் அளவுக்குத் தடிமனாகவும் இருக்கிறது.

‘மேல்தோல்’ (Epidermis), ‘நடுத்தோல்’ (Dermis), ‘உள்தோல்’ (Hypodermis) எனும்  மூன்றடுக்குப் படலத்தால் ஆனது நமது தோல். உடலின் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் கவசமாக மேல்தோல் இருக்கிறது. மேல்தோல் ஐந்து படலங்களால் ஆனது. ஒவ்வொன்றும் ‘கெரட்டின்’ (Keratin) செல்களால் ஆனது. இதன் மேற்பரப்பில் பழைய செல்களே இருக்கும். இதன் அடிப்பரப்பில் புதிய செல்கள் பிறந்து, மேற்பரப்பு நோக்கி வந்துகொண்டிருக்கும்.

இவை மேற்பரப்புக்கு வந்து சேர்ந்ததும் உயிரிழந்த செல்களாக மாறிவிடும். இப்படி இறந்துபோன செல்கள் நாம் குளிக்கும்போதும், உடை மாற்றும்போதும் ஆயிரக்கணக்கில் தினமும் உதிர்ந்துவிடும். இவ்வாறு ஒரு கெரட்டின் செல் உருவாகி உதிர்வதற்கு 35லிருந்து 45 நாட்கள் வரை ஆகிறது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமாக’ கெரட்டின் செல்கள் இருப்பதால்தான் நம் தோல் பார்ப்பதற்கு எப்போதும் புதிதாக இருக்கிறது.

மேல்தோலில்தான் நம் தோலுக்கு நிறம் தருகின்ற ‘மெலனின்’ (Melanin) எனும் நிறமிகள் உள்ளன. இவற்றை ‘மெலனோசைட்’ (Melanocyte) எனும் செல்கள் சுரக்கின்றன. இந்த நிறமிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்றால், தோலின் நிறம் கறுப்பு; கொஞ்சம் குறைவாக இருந்தால் மாநிறம்; மிகவும் குறைவாக இருந்தால் வெள்ளை நிறம்.தோலின் மேற்பரப்பில் நிறைய வியர்வைத் துவாரங்கள் உள்ளன. உள்தோலில் தொடங்கி நடுத்தோல் வழியாக மேல்தோலுக்கு வந்து வியர்வைத் துவாரத்தில் முடிகிறது, வியர்வைச் சுரப்பி. உடலில் சுமார் 30 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

நடுத்தோலில் ‘கொலாஜென்’ எனும் பசை போன்ற புரதப்பொருளும், ‘எலாஸ்டின்’ என்ற புரதப்பொருளும் உள்ளன. இவை தோலை மிருதுவாக வைத்துக் கொள்ளவும், தோலுக்கு மீள்தன்மையைக் கொடுக்கவும் உதவுகின்றன.  தோல் பளபளப்பாக இருப்பதற்கு, தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் (Sebaceous glands)தான் காரணம்.

நடுத்தோலில் ரத்தக்குழாய்கள், நிணநீர்க்குழாய்கள், நரம்புகள், நார்த்திசுக்கள் நிறைய உள்ளன. இங்குள்ள ரோமக்காலிலிருந்து (Hair Follicle) முடி முளைத்து  மேல்தோலுக்கு வருகிறது. அடித்தோலில் கொழுப்புத் திசுப் படலம் உள்ளது.

தோல் புற்றுநோய் வகைகள்

தோலில் தோன்றும் புற்றுநோயை மூன்றுவகைகளாகப் பிரிக்கலாம். 1. பேஸல் செல் வகை (Basal Cell Carcinoma). 2. ஸ்குவாமஸ் செல் வகை (Squamous Cell Carcinoma).

3. மெலனோமா செல் வகை (Melanoma).தோலில் முதன்மைப் புற்றுநோயும் (Primary cancer) வரலாம். மாறாக, மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய் போன்ற மற்ற புற்றுநோய்கள் தோலுக்குப் பரவலாம். அப்போது அந்தப் புற்றுநோயைப் ‘பரவிய வகைப் புற்றுநோய்’ (Secondary cancer) என்கிறோம்.

1.பேஸல் செல் வகை:  பொதுவாக, இந்த வகைப் புற்றுநோய் வெள்ளைத் தோலுள்ளவர்களுக்கு வருகிறது. அதனால் மேற்கத்திய நாட்டினருக்கு இது அதிகம். கறுப்புத் தோலுள்ளவர்களுக்கு இது வருவதில்லை. குறிப்பாக, கறுப்பினத்தவர்களுக்கும் இந்தியர்களுக்கும் இது வருவதில்லை. மூக்குப் பகுதியிலும், கண்களுக்கு இடைப்பட்ட தோலிலும், வாய்ப்பகுதிக்கு இடைப்பட்ட முகத்தின் முக்கோணப் பகுதியிலும் இந்தப் புற்றுநோய் வருவதுண்டு. இது நிணக்கணுக்களில் பரவாது. அதனால், நெரிகட்டுகள் ஏற்படாது.

வழக்கத்தில், இது சிறு கொப்புளம்போல் தொடங்கும். அதனால் அதன் தீவிரம் புரியாமல் பலரும் இதை அலட்சியம் செய்துவிடுவார்கள். நாளடைவில் இந்தக் கொப்புளம் பெரிதாகி, உடைந்து, புண்ணாகிவிடும். இந்தப் புண் வழக்கமான மருந்துகளில் ஆறாது. தொடக்கத்தில் புண்ணில் வலி ஏற்படாது. போகப்போக வலி ஆரம்பிக்கும். ரத்தக்கசிவும் உண்டாகலாம். அதைத் தொடர்ந்து சில மாதங்களில் தோலை ஊடுருவிச் சென்று, தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பரவிவிடலாம். இது பொதுவாக, சாதுவானது. அருகிலுள்ள நிணக்கணுக்களில் பரவாது. அதனால் நெரிகட்டுகள் ஏற்படாது.

2.ஸ்குவாமஸ் செல் வகை: இது தோலில் எந்த இடத்திலும் வரலாம் என்றாலும், நெற்றிப் பகுதி, முகத்தைச் சேர்ந்த காதுப் பகுதி ஆகிய இடங்களில் இந்த வகைப் புற்றுநோய் அதிகமாக வருகிறது. இது பேஸல் செல் வகைபோல் சாதுவானது கிடையாது. இது அருகிலுள்ள நிணக்கணுக்களில் பரவும் தன்மை கொண்டது. அதனால் கழுத்தில் நெரிகட்டுகள் ஏற்படும். உடலுக்குள் பல இடங்களில் இது பரவக்கூடியது.

தொடக்கத்தில், சிறிய கட்டியாகத் தொடங்கும். வலிக்காது. சிகிச்சை பெறத் தவறினால், கட்டி பெரிதாகி உடைந்துவிடும். பிறகு, ஆறாத புண்ணாக அது மாறிவிடும். மூன்று வாரங்களுக்குள் இந்தப் புண் ஆறவில்லை என்றால், உடனே மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். இப்போது பலருக்கும் சர்க்கரை நோய் இருப்பதால், ‘சர்க்கரை நோய் இருப்பதால்தான் புண் ஆறவில்லை’ என்று தவறாகக் கருதி, புற்றுநோயின் தொடக்க நிலையில் பலரும் இதற்கு சிகிச்சை எடுக்க முன்வருவதில்லை.

3. மெலனோமா செல் வகை: முதலில் சொன்ன இரண்டு வகைகளைவிட இது சற்றே ஆபத்தானது. தொடக்கத்தில் சிறிய மச்சம்போன்று தடிப்பு தோன்றும். அது திடீரென்று வேகம் எடுத்து வளரும். வலி ஏற்படும், ரத்தக்கசிவு உண்டாகும். இது பெரும்பாலும், மலவாய், முதுகுத் தோல், கால் விரல்கள் ஆகிய இடங்களில் தோன்றும். அருகில் உள்ள நிணக்கணுக்களுக்குப் பரவி, நெரிகட்டுகளை ஏற்படுத்தும். உடலுக்குள்ளும் பல இடங்களுக்குப் பரவும்.

என்ன பரிசோதனைகள் உள்ளன?

தோல் புற்றுநோயைப் பொறுத்தவரை திசு ஆய்வுப் பரிசோதனைதான் (Biopsy) முக்கியமானது. ஆறாத புண்ணிலிருந்தோ, கட்டியிலிருந்தோ சிறிதளவு திசுவை வெட்டியெடுத்து, பகுப்பாய்வு செய்து, அது புற்றுநோயா, இல்லையா, புற்றுநோயாக இருந்தால், அது எந்த வகை எனத் தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்தப் புற்றுநோய் உடலுக்குள்

பரவியிருக்கிறதா என்பதைக் கண்டறிய, எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ‘பெட்-சி.டி’ ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்தப் பரிசோதனை முடிவுகளைக் கொண்டு அது எந்த நிலையில் இருக்கிறது என்பது முடிவு செய்யப்படும்.

புற்றுநோய் நிலைகள்

நிலை 1: புற்றுநோய் அளவு 2 செ.மீ.க்கும் குறைவாகக் காணப்படும் ஆரம்ப நிலை இது.

நிலை 2: புற்றுநோய் அளவு 2 செ.மீ.க்கும் அதிகமாகக் காணப்படும் நிலை இது. அருகில் இருக்கும் நிணக்கணுக்களுக்குப் பரவியிருக்கும். உதாரணமாக, முகத்தில் புற்றுநோய் என்றால் கழுத்துப் பகுதியில் நெரிகட்டு காணப்படுவது.

நிலை 3: உடலில் பல நிணக்கணுக்களுக்குப் பரவி நெரிகட்டிகள் காணப்படும் நிலை இது.

நிலை 4: தோல் புற்றுநோய் கல்லீரல், மண்ணீரல், எலும்புகள் எனப் பல உறுப்புகளில் பரவியிருப்பது.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

முதல் இரண்டு நிலைகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலையில் உள்ள புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு சிகிச்சை தரப்படுகிறது. மெலனோமா புற்றுவகைக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சையோடு மருந்து சிகிச்சையும்

தரப்படுவதுண்டு.

தோல் புற்றுநோயைப் பொறுத்தவரையில் ஆரம்ப நிலையில் கவனித்துவிட்டால், சிகிச்சைகள் எளிதாகும். புற்று ஆழமாக ஊடுருவி விட்டது என்றால், சிகிச்சை கடினமாகும். ஆகவே, தோலில் எந்த இடத்திலாவது சிறிய தடிப்போ, வீக்கமோ, கட்டியோ, மச்சமோ எது தோன்றினாலும்,  வலி இல்லை என்ற காரணத்தால் அதை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது. அதுதான் தோல் புற்றுநோயைத் தடுக்கும் உன்னத வழி!

Related Stories: