சரும நச்சு நீக்கம் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

டீடாக்ஸ் இன்று பலராலும் பரிந்துரைக்கப்படும் முக்கியமான தெரப்பி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலையும் மனதையும் புத்துணர்வாக்குவதே டீடாக்ஸ். நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, நம் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் நாள்தோறும் நம் உடலுக்குள் தேவையற்ற பொருட்கள் நுழைகின்றன. ஒரு கட்டத்தில் இவை நச்சாக மாறி நம் உடலுக்கு கேடாக மாற வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்களை அவ்வப்போது சுத்தம் செய்தால்தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு ஏராளமான டீடாக்ஸ் ட்ரிக்ஸ் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சரும நச்சு நீக்கம்.

சரும நச்சு நீக்கம்

நாம் வெறுமனே மூக்கால் மட்டும் சுவாசிக்கவில்லை. நம் சருமத்துளைகளும் சுவாசிக்கவே செய்கின்றன. நம் தோலில் உள்ள மெல்லிய துளைகள் வழியாக காற்றும் உயிர் வளியும் நம் உடலில் சென்று வருவதால்தான் நம்மால் எந்த சீதோஷ்ண நிலையிலும் நிலையாய் இருக்க இயலுகிறது. அதாவது, நம் சருமத் துளைகள் வெளிப்புற சீதோஷ்ணத்துக்கு தக்க நம்மை தகவமைக்க உதவுகின்றன. இப்படி நம் சருமம் காற்றை சுவாசிக்கும்போதும், வெயிலும், வெளிப்புறத் தூசும் நம் உடலில் படும்போது நம் சருமத்துளை வழியே ஏராளமான நச்சுக்கள் உள்ளே செல்கின்றன. இந்த நச்சுக்களை எவ்வாறு நீக்கலாம் என்பதற்கான வழிமுறையே சரும நச்சு நீக்கம் எனப்படும் ஸ்கின் டீடாக்ஸ் ட்ரிக்ஸ்.

நச்சு நீக்கம் எப்படிச் செயல்படுகிறது?

சரும நச்சு நீக்கம் என்றதுமே பெரும்பாலானவர்கள் சருமத்தில் மாய்சுரைசர், சன் ஸ்க்ரீன்களைத் பூசுவது, சரும மேற்பரப்பில் ஆர்கானிக் பொருட்களைப் பூசுவது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால், நம் சருமத்தால் நச்சை உள்வாங்க முடியுமே தவிர அதனால் தானாக நச்சை நீக்க முடியாது. நம் உடலில் உள்ள அடிப்படை உள்ளுறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகள்தான் இந்த நச்சு நீக்கச் செயல்பாட்டை செய்ய இயலும். எனவே, அவற்றுக்கும் நச்சு நீக்கம் தர வேண்டியது அவசியம்.

 சருமத்தைப் பாதுகாப்பது அல்லது நச்சு நீகம் செய்வது என்றதுமே சருமப் பராமரிப்புப் பொருட்களை நாடுவது இயல்புதான். ஆனால், எல்லா சருமப் பராமரிப்புப் பொருட்களுமே எல்லோருக்குமானது அல்ல. உதாரணமாக, ”டேச்சிபைலாசிஸ்” என்றோர் பிரச்சனை உண்டு. சிலவகையான ஸ்டீராய்டுகள் ஒருவரின் நரம்பு மண்டக் கோளாறுகளால் அதன் திறனை இழந்து குறைவான பலனளிப்பதே இந்த நிலை. இந்தப் பிரச்சனை உடையவர்கள் ஸ்ட்ராய்டு உள்ள சருமப் பொருட்களை எடுக்கும்போது பலன்

இல்லாமல் போகிறது.

மேலும், எந்த சருமப் பராமரிப்பு க்ரீம்களாலும் தானாகவே சரும நச்சை நீக்க இயலாது. ஏனெனில் சருமத்தால் தானாக நச்சை நீக்க இயலாது. சிலவகை ஆண்டிஆக்ஸிடண்ட் உள்ள சருமப் பராமரிப்புப் பொருட்கள் சுற்றுச் சூழலால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளைத் தடுக்கக் கூடும். ஆனால், அவற்றால் கூட ஃப்ரீரேடிக்கல்ஸ் எனப்படும் சரும மூப்பை தடுக்க இயலாது.

 வியர்க்கும்போது நச்சு நீங்கும்தானே என்று ஒருவர் கேட்கக்கூடும். ஆனால், வியர்க்கும்போது யூரியா போன்ற சிலவகை நச்சுகள் நீங்குகின்றனதான். மற்றபடி வியர்வை என்பது பெரும்பகுதி நீர்மம்தான் என்கிறது நவீன மருத்துவ உலகம். இதுபோலவே யோகா, கார்டியாக் பயிற்சிகள் நச்சை நீக்கும் என்பதற்கும் ஏதும்

ஆய்வுகள் இல்லை.

 தீர்வு என்ன?

சரி அப்படியானால் சரும நச்சு நீக்கத்துக்கு என்னதான் தீர்வு என்ற கேள்விக்குப் பதில், நீங்கள் உங்கள் சருமத்தின் குரலைக் கேளுங்கள் என்பதுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். உலர்ந்த சருமம், எண்ணெய்ப் பிசுக்கு சருமம், இரண்டு கலந்த சருமம், சாதரண சருமம், சென்சிஸ்டிவ் சருமம் என ஐந்து அடிப்படை வகை சருமங்கள் உள்ளன. இதிலும் பருக்கள் அதிகம் உள்ள சருமம், சிவப்பு, கரும்புள்ளிகள் கொண்ட சருமம் போன்ற வகைகளும் உள்ளன. எனவே, உங்கள் சருமம் என்ன வகை எனக்

கண்டறியுங்கள்.

உங்கள் சருமத்தின் இயல்பு எப்படி எனக் கண்டறியுங்கள். காலையில் எழுந்ததும் சருமம் எப்படி உள்ளது. குளித்து முடித்ததும் எப்படி உள்ளது. ஒரு மணி நேரம் கழித்து எப்படி உள்ளது. எங்காவது வெயிலில் அலைந்து திரிந்தால் எப்படி இருக்கிறது. இரவில் படுக்கைக்கு முன் எப்படி இருக்கிறது. முகம் கழுவிய எவ்வளவு நேரத்தில் எண்ணெய்ப் பிசுக்கு உருவாகிறது என்பதை எல்லாம் நன்றாகக் கவனியுங்கள். உங்கள் சருமத்தின் இயல்பைக் கண்டறிதலே நல்ல நச்சு நீக்க டெக்னிக்கின் முதல் படி.

உங்களுக்கான சிறப்பான மாய்ஸ்சுரைசர், க்ளென்சர் எதுவென கண்டறியுங்கள். அதனைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துங்கள். காலையிலும் இரவில் படுக்கைக்குப் போகும் முன்பும் தினசரி இருவேளை பயன்படுத்துங்கள். எண்ணெய்ப்பிசுக்குள்ள சருமம் என்றால் டோனர் பயன்படுத்திய பிறகு பஞ்சு கொண்டு மென்மையாகத் தடவினாலே போதுமானது. சன்ஸ்க்ரீன் மற்றும் எஸ்.பி.எஃப்களை தினசரி காலையில் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

இவற்றைச் செய்தபின் உங்கள் சரும வகைக்கு ஏற்ப மேல் பூச்சுகளைச் செய்யலாம். உதாரணமாக, பருக்கள் அதிகம் உள்ளவர்கள், சாலிக் அமிலம் (Salicylic Acid) அல்லது பென்ஸாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) வேதிப் பொருட்கள் அடங்கிய க்ரீம்களை மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் பயன்படுத்தலாம்.

 இறந்த செல் நீக்கம்

சரும நச்சு நீக்கத்தில் இது ஒரு முக்கியமான நிலை. இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை நம் உடல் பழைய செல்களை நீக்கிவிட்டு தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். இப்படி காலாவதியான இறந்த செல்கள் நம் சரும மேற்பரப்பிலேயே இருக்கவும் வாய்ப்புண்டு. இந்த செல் நீக்க டெக்னிக்குகள் மூலம் இவற்றை உடலிலிருந்து நீக்கி புத்துணர்வாக்கலாம். இதற்கு இரண்டு முறை உள்ளன. ஒன்று, நாமே இதற்கான பிரத்யேக ஸ்க்ரப்பர்கள் கொண்டு உடலில் தேய்ப்பது.

ஆனால், இதனை சென்ஸ்சிடிவ் சருமம் மற்றும் எண்ணெய்ப் பிசுக்கு அதிகம் கொண்ட மென்மையான சருமத்தினர் செய்யக்கூடாது.  இன்னொரு முறை நிபுணரை நாடி வேதிப் பொருட்கள் மூலம் சுத்தம் செய்துகொள்வது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

உணவுப் பழக்கம்

ஆரோக்கியமான உணவுப் பழக்கம் பளபளப்பான ஆரோக்கியமான சருமத்துக்கு அடிப்படை. தினசரி நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நச்சு நீக்கம்

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்யும் எனிமா போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தின் நாடி சுத்தி டெக்னிக்களும் உதவும். இவற்றை எல்லாம் முறையே செய்து வந்தாலே சரும டீடாக்ஸ் நன்றாகப் பலன் தரும்.

தொகுப்பு : சரஸ் 

Related Stories: