×

சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே ஈரடுக்கு சாலை பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீது அமைச்சர் எ.வ.வேலுவின் பதிலுரை பின்வருமாறு: தமிழ்நாடு அரசின் மொத்த மூலதன ஒதுக்கீடு ரூ.44,366 கோடி இதில், சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்பாட்டிற்காக ரூ.17,421 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகள் என 66,382 கி.மீ. சாலைகள் பாரமரிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைகளில் 1,677 கி.மீ நீளச் சாலைகள் மாநில தேசிய நெடுஞ்சாலை 5,128 கி.மீ நீளச் சாலைகள் நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்படுகின்றன.
கடந்த 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அறிவித்த, 1070 கி.மீ நீளமுடைய மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாகவும், 1456 கி.மீ நீள மாவட்ட இதரச்சாலைகள் மாவட்ட முக்கிய சாலைகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கி.மீ நீளமுடைய இருவழிச் சாலைகளை, நான்குவழிச் சாலைகளாகவும், 6,700 கி.மீ நீளமுடைய ஒருவழி, இடைவழிச் சாலைகளை, இருவழிச் சாலைகளாகவும், அகலப் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில், 403 கி.மீ நீளமுள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை ரூ.3,530 கோடியில், நான்குவழிச் சாலைகளாகவும், 1,164 கி.மீ நீளமுடைய இடைவழிச் சாலைகளை, ரூ.1,668 கோடியில், இரண்டு வழிச் சாலைகளாகவும், மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை விபத்துகளில் சிக்கி தவிப்போரின் உயிர்களை காத்திட முதல்வர் உருவாக்கி தந்த, ‘‘இன்னுயிர் காப்போம்’’, ‘‘நம்மைகாக்கும் 48’’ திட்டத்தின்கீழ், 4,363 விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டு, அதில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கு  உட்பட்ட 2,093 விபத்துப் பகுதிகளுக்கு ரூ.90 கோடியில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நபார்டு வங்கி கடனுதவியுடன் 158 பாலப்பணிகள் ரூ.818 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது.
இதேபோல, தேர்தல் அறிக்கையில், 2021-22 மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, அனைத்துக் கால நிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தில்,   கடந்த இரண்டு ஆண்டுகளில், 863 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக மேம்படுத்த, ரூ.1,547 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து தரைப் பாலங்களுக்கும் 2026க்குள் உயர்மட்டப் பாலங்களாக, மேம்படுத்தப்பட்டு, தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும். அதேபோல, மாநில அரசால் 139 புறவழிச் சாலைகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2ன்கீழ், 6 பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தில், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் 73 கி.மீ நீளமுடைய சாலைகள் இருவழித் தடத்திலிருந்து, நான்குவழித் தடமாகவும், 517 கி.மீ சாலைகள் இருவழித் தடத்திலிருந்து கடின புருவங்களுடன் கூடிய இருவழித் தடமாகவும், ஆக மொத்த 16 மாநில நெடுஞ்சாலைகள்  மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 2021-22ம் ஆண்டு - 7, 2022-23ம் ஆண்டு - 3 என மொத்தம் 10ரயில்வே மேம்பாலங்கள்  மற்றும்    2021-22ம் ஆண்டு ஒரு ரயில்வே கீழ்ப்பாலம் ரூ.332 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப் பட்டுள்ளன. நிலுவையில் இருந்த 24 பணிகள் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பணிகள் செயலாக்கத்துக்கு கொண்டுவரப் பட்டுள்ளன. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, 20.5 கி.மீ நீளத்திற்கு, கூவம் நதிக்கரையோரம், உயர்மட்டச் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும். கடந்த ஆண்டு வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் இரண்டு அடுக்கு சாலை மேம்பாலமும் மேடவாக்கம் சந்திப்பில், தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லும் இரண்டு வழித்தட சாலை மேம்பாலமும்  ரூ.241 கோடி  மதிப்பில் திறந்து வைக்கப்பட்டது.

9 சாலைச் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூ.9 கோடி மதிப்பிலும், இவற்றில் 8 பணிகளுக்கு நில எடுப்பு பணிகள் ரூ.800 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகின்றன. அதேபோல, 2021-22ம் ஆண்டில் நடைபெற்ற பணிகளில், உள்தணிக்கைக் குழு கடந்த ஆண்டு மே மாதம் ஆய்வு மேற்கொண்டது. இதில், கண்காணிப்புப் பொறியாளர்கள் தலைமையில், 21 குழுக்கள் வெவ்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேற்படி குழுவால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையால் சீரான நிர்வாகம், வெளிப்படை தன்மை உறுதி செய்யப்படுகிறது  என்றார்.



Tags : Chennai Port ,Maduravayal ,Minister ,AV Velu , Road work between Chennai Port - Maduravayal will start soon: Minister AV Velu informs
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்