×

திருப்பதியில் தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு எஸ்.வி.கோசாலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்திக்கு திட்டம்-அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை :  திருப்பதி எஸ்.வி.கோசலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா  தெரிவித்தார்.
திருப்பதி எஸ்.வி.கோசாலையில் புதிதாக கட்டப்பட்ட தீவன உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தேவஸ்தான கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தப்படும் பூக்களில் இருந்து அகர்பத்தி தயாரிக்கும் 2வது உற்பத்தி பிரிவை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு  தலைவர்  ஒய்.வி.சுப்பா, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
பின்னர், அறங்காவலர் குழு  தலைவர்  ஒய்.வி.சுப்பா  கூறியதாவது:

திருமலை மற்றும் திருப்பதியில், ஏழுமலையான் கோயில் தேவஸ்தானத்தின்  தொடர்புடைய கோயில்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப தூய பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை உற்பத்தி செய்ய  நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, தேசிய நாட்டு மாடு வளர்ப்பு, உள்நாட்டு மாடுகளின் வளர்ப்புக்காக பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. கன்று வளர்ச்சி, பசு வளர்ச்சி, ஆரோக்கியம், இனப்பெருக்கம் மற்றும் தரமான பால் உற்பத்தி ஆகியன பசுக்களுக்கு நாம் வழங்கும் தீவனத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழகம் இது சம்பந்தமாக  3 வகையான பார்முலாக்களுடன் கலப்படமற்ற தரமான கால்நடை தீவனத்தை தயாரிப்பதற்காக அமெரிக்காவின்  நியூடெக் பயோசயின்சஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ₹11 கோடியில் தேவஸ்தானமே சொந்தமாக தீவன உற்பத்தி ஆலையை உருவாக்கியுள்ளது. இதற்கு ஒருவர் ₹2 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

இன்று(நேற்று) முதல் இந்த ஆலையில் தீவன உற்பத்தி நடைபெறும். தேவஸ்தான தேவைகளுக்காக ஒரு நாளைக்கு 4,000 லிட்டர் பால் உற்பத்தி செய்ய தீவன உற்பத்தி ஆலை போதுமானது.
பசுக்களுக்கு செறிவூட்டப்பட்ட முழுமையான தீவனம் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை 10 முதல் 15 சதவீதம் அதிகரிக்கலாம். இங்கு தயாரிக்கப்பட்ட முழுமையான தீவனத்தை பசுக்களுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து பசுக்கள் கொடுக்கும் பாலில் புரதச்சத்து அதிகமாகும். இதனால் தினசரி தேவையான 4,000 லிட்டர் பாலை படிப்படியாக பூர்த்தி செய்ய உதவும்.

மேலும், நன்கொடையாளர்கள் உதவியுடன் 500 நாட்டு மாடுகளை வளர்க்க முடிவு செய்துள்ளோம்.  இதன் ஒருபகுதியாக ராஜஸ்தானில் இருந்து இதுவரை 120க்கும் மேற்பட்ட கிர், கான்கிரிஜ் நாட்டு மாடுகளை கொண்டு வந்துள்ளோம்.திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தின் இதர கோயில்களில் பயன்படுத்தப்படும் மலர்களில் இருந்து மணம் வீசும் அகர்பத்திகள் தயார் செய்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 13, 2021 அன்று பெங்களூரை சேர்ந்த தர்ஷன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தேவஸ்தானம் சார்பில் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இதுவரை ₹30.66 கோடி மதிப்பில் அகர்பத்திகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த அகர்பத்திகளுக்கு பக்தர்களின் பெரும் தேவை காரணமாக, உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தற்போதுள்ள தொழிற்சாலையில்  ₹2 கோடியில் 2வது யூனிட் தயார் செய்யப்பட்டு உள்ளது.தற்போது நாள்தோறும் 15 ஆயிரம் அகர்பத்திகள் தயாரிக்கப்படுகின்றன. 2வது யூனிட் செயல்பட தொடங்கினால் இந்த எண்ணிக்கை நாளொன்றுக்கு 30 ஆயிரம் பாக்கெட்டுகளாக அதிகரிக்கும். இதன் மூலம் சுமார் 200 உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

பக்தர்கள்  லட்டு பிரசாதத்தை போன்று அகர்பத்திகளை பிரசாதமாக பெற்று செல்கின்றனர். இனிவரும் நாட்களில் ஒவ்வொரு பக்தருக்கும் சுவாமியின் ஊதுபத்திகள் சென்றடைய வாய்ப்புள்ளது. மேலும், தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், இணை செயல் அதிகாரி சதா பார்கவி, ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாப , அறங்காவலர் குழு உறுப்பினர் போகல அசோக்குமார்,  தலைமை பொறியாளர்  நாகேஸ்வரராவ், கோசாலை இயக்குனர் ஹரநாத , கோ பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்பினர்கள்  ராம் சுனில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tirupati Plan ,SV Gosala - Board of Trustees , Tirumala: Chairman of the Board of Trustees said that it is planned to produce 4,000 liters of milk daily at Tirupati SV Kosala.
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்