×

திருவட்டார் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு பைக் தவணை, வழக்கு செலவுக்காக திருடினோம்-கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

குலசேகரம் : திருவட்டார் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவத்தில் கைதான 3 பேரும் நீதிமன்ற வழக்கு செலவுக்காக செயின் பறித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். திருவட்டார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் சுமார் 12 மணியளவில் மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவெண் இல்லாத பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் 3 பேரும், பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றனர். ஆனாலும் போலீசார் துரத்திச்சென்று 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

 விசாரணையில், அவர்கள்  குளச்சல் நாடாத்தி விளையை சேர்ந்த நிதிஷ்ராஜா(22), வழுக்கம்பாறை மணவிளை  பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20), செம்மான்விளை ஓலக்கோடு பகுதியை சேர்ந்த  பிரேம்தாஸ் (23) என்பது தெரிய வந்தது. கடந்த 29ம்தேதி மூவாற்றுமுகம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற திருவட்டாரை சேர்ந்த சுனிதா என்ற பெண்ணிடம் 7 பவுன் செயினை பறித்து சென்றது இவர்கள் 3 பேர் தான் என்பது தெரிய வந்தது.இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

 அவர்களில் விக்னேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விக்னேசுக்கு தந்தை சவுந்தர், தாயார் ஜெயா, 10ம் வகுப்பு படிக்கும் ஒரு தங்கை உள்ளனர். சவுந்தர் வீட்டிலேயே இன்ஸ்டால்மென்ட் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கூலி வேலை செய்து வந்த விக்னேஷ் போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்பனை செய்து வந்தார்.
 இதனால் அவர் மீது  அஞ்சுகிராமம், தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் தலா ஒரு கஞ்சா வழக்கு உள்ளது. இதேபோல் கொலை வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் நிபந்தனையின் பேரில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடையின் போது விக்னேஷ் பொம்மை வியாபாரம் செய்துள்ளார்.

 அப்போது அங்கு ஐஸ்கிரீம் வியாபாரம் செய்த நிதிஷ் ராஜா, பிரேம்தாஸ் ஆகியோர் பழக்கமாகினர். அவர்கள் 2 பேர் மீதும் கருங்கல், குளச்சல்  காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளதை விக்னேஷ் தெரிந்து கொண்டார். 3 பேரும் வழக்கு செலவுக்கு பணமில்லாமல் தவித்து வந்து உள்ளனர். எனவே கூட்டு சேர்ந்து எங்காவது திருடி நிறைய சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

  இந்த நிலையில் விக்னேசும், பிரேம் தாசும் நிதிஷ் ராஜாவின் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த நிதிஷ் ராஜாவுக்கு சொந்தமான புதிய பைக்கை பார்த்தனர். இந்த பைக்கை பைனான்ஸ் நிறுவனத்தின் மூலம் வாங்கிய நிதிஷ் ராஜா அதற்கான தவணை தொகையை கட்ட முடியாமல் தவித்து உள்ளார். மேலும் பைக்கை அவர் பதிவு செய்யவில்லை.
எனவே இந்த பைக்கை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட திட்டமிட்டனர். இதன்மூலம் வரும் வருமானத்தில் வழக்கு செலவு மற்றும் பைக் தவணை ஆகியவற்றை கட்டுவதோடு, 3 பேருக்கும் புதிய விலை உயர்ந்த பைக் வாங்கி உல்லாசமாக வாழ திட்டமிட்டனர். திட்டமிட்ட சிறிது நேரத்திலேயே அன்று மாலையில் மூவாற்றுமுகம் பகுதிக்கு சென்ற போது தான், ஸ்கூட்டரில் சென்ற சுனிதாவிடம் செயினை பறித்துள்ளனர்.

ஆனால் அந்த செயின் 7 பவுன் மட்டுமே இருந்ததால் மீண்டும் செயின் பறிப்பில் ஈடுபட திட்டமிட்டனர். அதன்படி மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே வந்த போது போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து விட்டனர். இவ்வாறு விக்னேஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்களிடம் இருந்து செயினையும், பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேருக்கும் வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர்.

4 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது

செயின் பறிப்பு சம்பவம் நடந்ததும், கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் வகையில் தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தான் கொள்ளையர்கள் சிக்கினர். சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். இதையடுத்து தனிப்படை எஸ்.ஐ.க்கள் அருளப்பன், சரவணன், எஸ்.பி. தனிப்பிரிவு எஸ்.ஐ. ரகு பாலாஜி, ஏட்டு ஷாலிஷ் பெகின் ஆகியோரை எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.

Tags : Tiruvattar , Kulasekaram: The 3 people arrested in the incident of snatching the chain from a woman riding a scooter near Thiruvatar said that they snatched the chain to pay for the court case.
× RELATED திருவட்டார் காவல் நிலையத்தில் வக்கீல்கள் போராட்டம்