×

100 நாள் வேலை திட்டத்தை கோடைகாலத்தில் செயல்படுத்த வேண்டும்-திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

திருச்சி : விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் 100 நாள் வேலை திட்டத்தை கோடை காலத்தில் செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நேற்று நடந்தது. குறைதீர் கூட்டம் துவங்குவதற்கு முன்னர் கலெக்டர் அலுவலக வாசலில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

அதில், ‘வேளாண் தொழிலை காக்க வேண்டுமெனில் நீராதாரங்களை காக்க வேண்டும். விவசாயிகளை காக்க விவசாய விளை பொருட்காளுக்கு நியாயமான விலை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர். இவர்களை தொடர்ந்து அங்கு வந்த தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாசலில் பருத்தியை கீழே கொட்டி, ‘பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து குறைதீர் கூட்டம் துவங்கி நடந்து கொண்டிருந்தது. அதில் விவசாயிகள் பேசியதாவது: விசுவநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்): திருச்சி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துவக்கத்தில் ரூ.80 வரை விலை கிடைத்தது. தற்போது ₹60 என குறைந்துவிட்டது. பாடுபட்டு பயிர் செய்த பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் திணறுகின்றனர். எனவே அரசு பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு ₹9 ஆயிரம் விலை நிர்ணயிக்க வேண்டும்.

அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்): மேட்டூரில் இருந்து வடபுறம் வாய்க்கால் வெட்டி அய்யாற்றுடன் இணைத்தால் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் உட்பட 2 கோடி மக்கள் பயனடைவர். நீராதாரங்களை பாதுகாக்காமல் எதிர்கால விவசாயம் இல்லை என்பதை அரசு கருத்தில் கொண்டு, நீராதாரங்களை காக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெறும் நாட்களில் அவர்களுக்கு 100 நாள் வேலைகளை கொடுப்பதால் விவசாயப் பணிகளுக்கு கூலியாட்கள் கிடைக்காமல், விவசாயப் பணிகள் தொய்வடைகிறது. எனவே 100 நாள் வேலை திட்டத்தை கோடை காலத்தில் வழங்க வேண்டும் அல்லது 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வீரசேகரன்: (பாரதீய கிசான் சங்க மாநில செயலாளர்): ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு என வேளாண் விளை பொருட்களை ரயில் நிலையங்களில் சந்தைப்படுத்த உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி. அந்த வகையில் டவுன் கோட்டை ரயில் நிலையம், ரங்கம் மற்றும் லால்குடி நிலையங்களில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த ரயில்வே நிர்வாகத்துக்கும் நன்றி.
அயிலை சிவசூரியன்.

(தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர்): திருச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய சூறைக் காற்றால் அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, மணிகண்டம் ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்திருந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி பாதிப்புக்குள்ளாகியது. இது குறித்து வேளாண்துறை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும். திருச்சி மாவட்டத்தின் 16 வாய்க்கால்கள் பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, தென்னை, வெற்றிலை உள்ளிட்ட ஆண்டுப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றை காக்கவும் மக்களின் குடிநீர் தட்டுப்பாடை போக்கவும், 16 வாய்க்கால்களின் பாசன உரிமையை மீட்டுத் தரவேண்டும் என்றனர்.

Tags : Farmers' Grievance Meeting ,Trichy , Trichy: Corporation employees removed encroachments from 120 shops on the occasion of Tiruchi Malaikotta Theppath festival.
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...