×

கொள்ளிடத்தில் 2010ம் ஆண்டு கட்டப்பட்டு புதர்மண்டி கிடக்கும் அரசு நூலக கட்டிடம்-பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடத்தில் 2010ம் ஆண்டு கட்டப்பட்ட அரசு நூலகம் கட்டிடம் திறக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இவற்றை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மேலவள்ளம் கிராமத்தில் கடந்த 2009-2010ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதியதாக நூலக கட்டிடம் கட்டப்பட்டது. பின்னர் 2014-15ல் மீண்டும் கட்டிடம் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைக்கப்பட்டது.

இந்த நூலக கட்டிடத்தை புதியதாக கட்டி திறப்பு விழா செய்யாமல் நூலகத்தை திறக்காமல் கட்டிடம் மூடியபடியே இருந்தது. ஆனால் நான்கு வருடம் கழித்து புனரமைப்பு மட்டும் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 23 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த நூலக கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கே வாசகர்கள் வந்து படித்து செல்லும் வகையிலும் வாசகர்கள் மற்றும் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையிலும் பொது அறிவை மேம்படுத்தும் விதத்திலும் பல்வேறு துறைகள் சார்ந்து படிக்கும் வகையிலும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் அரசு சார்பில் பல சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதில் சிறந்த தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஆன்மீகவாதிகள் உள்ளிட்ட அனைத்து கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களும் அடங்கும். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள், கலை, அறிவியல், கணினி, வணிகவியல், பொருளாதாரம், கணிதம் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த நூல்களும் இந்த நூலகத்துக்கு வழங்கப்பட்டன. ஒவ்வொரு நூலகத்துக்கும் ஒவ்வொரு நூலகரை அரசு நியமித்து கிராமப்புற மக்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவி செய்தது. அந்த வகையில் பல ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டி புதிய நூலகங்கள் திறக்கப்பட்டன.

அவைகள் தொடர்ந்து அந்தந்த பகுதியில் இயங்கி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கொள்ளிடத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் கட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் இதுவரை அதனை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படும் வகையில் கட்டப்பட்டு எந்த பயனும் இன்றி மூடி கிடக்கின்ற இந்த நூலக கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Government Library , Kollidham: The government library building in Kollidham built in 2010 is lying unopened. Remove these for use
× RELATED கருங்கல்பாளையம் அரசு நூலகத்தில் மகளிர் தின விழா கொண்டாட்டம்