×

200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால நாணயம் கீழக்கரையில் கண்டெடுப்பு

கீழக்கரை : கீழக்கரை அருகே 200 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால நாணயங்களை பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்கால பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கூறியதாவது: மாணவர்கள் பிரவின்ராஜ், ஐயப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்ட வடிவ நாணயங்களை கீழவலசை, சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் 3 செப்பு நாணயங்கள், 1 வெண்கலத்தால் ஆனது. ஒன்று கிபி 1833ல் வெளியிடப்பட்டது. நாணயத்தின் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரை, மறுபுறம் தராசு படம் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும், அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.

மற்றொன்று கிபி 1887ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. காலணா மதிப்புள்ளது. ஒரு காலணாவில் இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறம் விக்டோரியா எம்ப்ரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது. அரசியாய் இருந்த விக்டோரியா, பேரரசியாக கிபி 1876ல் பிரகடனப்படுத்தினார். இதனால் கிபி 1877க்கு பின் வந்த நாணயங்களில் அவர் எம்ப்ரஸ் (பேரரசி) என குறிப்பிடப்படுகிறார்.

சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த இரண்டு நாணயங்களில், ஒன்று கிபி 1835ல் வெளியிடப்பட்ட சிறிய காசு ஆகும். இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அதன் நடுவில் அரையணா எனவும் மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது. மற்றொன்று ஆறாம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கிபி 1941ல் வெளியிடப்பட்டது. இது காலணா மதிப்புள்ளது. ஒரு காலணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறம் ஆறாம் ஜார்ஜ் எம்பரர் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது.

திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, நாணயகளை கடலில் விட்டுச் செல்கின்றனர். இந்த நாணயங்கள், அவ்வாறு விட்டவையாக இருக்கலாம். இவ்வாறு கூறினர்.

Tags : 200 year old British-era coin found on the lower bank
× RELATED தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை