பாஜ அரசை கண்டித்து புதுவையில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  மே 26:  மத்திய பாஜக அரசின் 4 ஆண்டு கால மக்கள் விரோத செயல்பாடுகளை  கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து  தரப்பினரும் திரளாக கலந்துகொள்ள நமச்சிவாயம் அழைப்பு
விடுத்துள்ளார். இதுதொடர்பாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வெளியிட்ட அறிக்கை: 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை  அளித்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான மக்கள் விரோத  மத்திய பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஒரு வாக்குறுதியைகூட நிறைவேற்ற  முடியாத வக்கற்ற அரசாக உள்ளது. மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களின்  வாழ்க்கையை கேள்விகுறியாக்கிய மோடி தலைமையிலான பாஜக அரசு செய்தது என்ன?.  

இந்திய நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல ஒரு திட்டத்தையாவது மோடி  நிறைவேற்றினாரா, எல்லோர் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்தப்படும்  என்று சொன்னாரே செய்தாரா, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு  இந்தியாவுக்கு கொண்டு வந்தாரா, வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தாரா, விவசாயிகளின் குறைகளை தீர்க்க திட்டங்கள்  கொண்டு வந்தாரா, வியாபாரிகளின் நலனை காத்தாரா, தனிநபர் வருமானத்தை  உயர்த்தினாரா, பெண்கள் நல முன்னேற்றத்தில் அக்கறை காட்டியது உண்டா,  மேக்-இன் இந்தியாவையும், டிஜிட்டல் இந்தியாவையும் உருவாக்கினாரா, இந்திய  தேசத்தின் ஒற்றுமைக்கு பாடுபட்டாரா, இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் இந்தியா  முழுவதும் பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க தொடங்கியுள்ளனர்.

புதிய  இந்தியாவை உருவாக்கி சாதனைகள் பல படைப்பேன் என்று கூறிய பணமதிப்பிழப்பு சட்டம் கொண்டுவந்து அனைத்து தரப்பு மக்களையும் வங்கி  வாசல்களில் அலையவிட்டதுதான் உங்கள் சாதனையா, ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி  வியாபாரிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதுதான் உங்கள் சாதனையா,  அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி அன்றாட மக்களை அல்லல்பட  வைத்ததுதான் சாதனையா, கச்சா எண்ணெய் விலை குறைந்தும் டீசல், பெட்ரோல், கேஸ்  சிலிண்டர் விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியதுதான் சாதனையா, மகளிர்  முன்னேற்றத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை குறைத்ததுதான் சாதனையா,  நாடெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த  இரக்கமற்ற அரக்கர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை  பார்த்ததுதான் சாதனையா, ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர்களை தங்களுடைய  கைப்பாவையாக வைத்துக்கொண்டு ஜனநாயக படுகொலைகளை நித்தம் நிகழ்த்திக்  கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மதவாத மத்திய அரசுக்கு மக்கள் சக்தியால்  நாம் பாடம் புகட்டவேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்திய தேசத்தை  பின்னோக்கி அழைத்து சென்று நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும்  கேள்விக்குறியாக்கி ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை  சீர்குலைத்து கொண்டிருக்கும் மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய பாஜக  அரசை கண்டித்து அகில  இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி ஆணைப்படி இன்று (26ம் தேதி) மாலை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர்  நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் பங்கேற்கிறார்கள்.  ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்த மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை  மீட்டெடுக்க, தேசநலன் காத்து நிற்க நடைபெற இருக்கின்ற மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு