இளம்பெண்ணை மிரட்டிய போலீஸ்காரர் கைது

காரைக்கால், மே 26: காரைக்கால் கோட்டுச்சேரி ஜிவாநகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(28). இவர், காரைக்கால் நிரவி காவல் நிலையத்தில் பணியாற்றிய
போது, காரைக்கால் கடற்கரைசாலை மற்றும் நிரவி எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஜோடியாக செல்லும் காதலர்களை மடக்கி செல்போனை பறித்துகொண்டும், அவர்களை ஜோடியாக படம் பிடித்து மிரட்டி வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், கடற்கரைக்கு சென்ற ஒரு ஜோடியை மடக்கி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த ஜோடி நிரவி காவல்நிலையத்தில் புகார் செய்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பணியிடை நீக்கத்தில் உள்ள ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன், காரைக்கால் நேரு நகரில் உள்ள கடையில் வேலை செய்யும் இளம்பெண்ணின் செல்போனை பறித்துகொண்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்தப்பெண் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜ்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரது வீட்டிலிருந்து 3 செல்போன் மற்றும் சில சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் ஆஜர்படுத்தப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டார்.

× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு