×

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: சென்னை பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால், 2வது சர்வதேச புதிய விமான நிலையம் தொடங்குவதற்கு செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 இடங்களை பரிந்துரை செய்தனர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் கிராமத்தை மையப்பகுதியாக வைத்து, சர்வதேச புதிய விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களில், சுமார் 5000 விளை நிலங்கள் எடுப்பு நடைபெற போவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும், நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரியவந்தது. இதனால், இந்த கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தை முன்வைத்து, விமான நிலையம் வருவதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது எனக்கூறி எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், நிலப்பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்துவிட்டு, தமிழ்நாடு அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும் என ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மக்கள் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, கடந்த ஜனவரி 26ம்தேதி குடியரசு தினம் அன்று சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரம் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், புதிய சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்து, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன், பரந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பலராமன், தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் உள்ளிட்ட 13 ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மான புத்தகத்தில் கையொப்பம் இட்டனர். மேலும், 13 கிராமங்களிலும் விமான நிலையம் வருவதை எதிர்த்து, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தகவல் பரவியது.

இதனால், காவல்துறையினர் ஏகனாம்புரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில், சுதந்திர தினம், உள்ளாட்சி தினம், மே தினம், குடியரசு தினம், உலக தண்ணீர் தினம் என 5வது முறையாக, விமான நிலையம் வருவதை எதிர்த்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஏகனாபுரம் கிராமத்தில் தொடர்ந்து 248 நாளாக, சென்னை பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில் பயிலும் 117 மாணவ, மாணவிகள் திடீரென பள்ளி புறக்கணித்து, கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, ஆதரவாக பெற்றோர் மற்றும் கிராமமக்களும் போராட்டம் நடத்தினர்.  மேலும், ஏகனாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Parantur airport , Boy and girl students boycotted school in protest against Parantur airport
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...