தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தை கண்டித்து புதுவையில் முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரி,  மே 26: தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தைபோல்  புதுவையிலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பஸ், டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை, கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்ததால் மக்கள்  இயல்பு வாழ்க்கை முடங்கியது. மறியலில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட  அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில்  பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மத்திய, தமிழ அரசுகளை கண்டித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள்  சார்பில் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சிறுத்தை, திக,  மதிமுக, குடியரசு கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி, மாணவர் கூட்டமைப்பு,  முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.புதுவையில் நேற்று முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.  புதுவையில் 300க்கும்  மேற்பட்ட தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை. அரசு  போக்குவரத்துக்கழக ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பிஆர்டிசி  பஸ் சேவையும் முடங்கியது. பொதுமக்கள், வெளியூர் பயணிகள்  அவதிக்குள்ளாகினர். தமிழக அரசு பஸ்கள் மிக குறைந்த அளவில்  இயக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்ட ஒருசில தமிழக அரசு  பஸ்களையும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வழிமறித்து பயணிகளை இறக்கி டெப்போவுக்கு  அனுப்பி வைத்தனர்.  எப்போதும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம்  வெறிச்சோடி காணப்
பட்டன.

சென்னை, கடலூர், விழுப்புரம்,  திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் சேவை முடங்கியது. டெம்போ, ஆட்டோக்களும்  ஓடாததால் புதுவை நகர பகுதியில் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி,  மகாத்மா காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடின.  பெரிய  மார்க்கெட், காய்கறி கடைகள், உழவர்சந்தைகளும் மூடப்பட்டன. வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், அங்காடிகள் திறக்கப்படவில்லை.  மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தது.  9 ஆயிரம் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் கோடிக்கணக்கில் வர்த்தகம்  பாதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். தியேட்டர்களில்  பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சாராயக்கடைகள், கள்ளுகடைகள், பார்களும் மூடப்பட்டது. அதேவேளையில் அரசு அலுவலகங்கள்,  வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. முழு அடைப்பு காரணமாக புதிய பஸ் நிலையம்  எதிரே (வெளிப்புற வாயில் முன்பு) புதுவை மாநில திமுக தலைமையில் அனைத்து  கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா  எம்எல்ஏ, காங்கிரஸ் நிர்வாகிகள் நீல.கங்காதரன், தேவதாஸ், விநாயகமூர்த்தி,  மார்க்சிஸ்ட் முருகன், பெருமாள், விடுதலை சிறுத்தைகள் தேவ.பொழிலன் உள்பட  500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.  பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த தமிழக பஸ்களை ரோட்டில் படுத்து  மறித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள்  உள்ளிட்ட அனைவரையும் உருளையன்பேட்டை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.  போலீசுக்கு  எதிராக போராட்டக்குழுவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு  நிலவியது. வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார் தலைமையில்  முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தியதோடு மறியலில் ஈடுபட்டு  கைதாகினர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் பாலசுப்ரமணியன் தலைமையில்  அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டு 40க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.  மதிமுகவினர் மாநில செயலாளர் கபிரியேல் தலைமையில் இந்திராகாந்தி சிலை  அருகே மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் பதவி விலகக்கோரி  கோஷமிட்டனர். இதையடுத்து 35 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணா எம்ஜிஆர்  அதிமுகவினர் ராஜசேகர் தலைமையில் பஸ் நிலையம் அருகே மறியல் செய்து  கைதாகினர். இதுதவிர ஆங்காங்கே திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மறியல்,  ஆர்ப்பாட்டம் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு  கைதாகினர். போராட்டத்தையொட்டி டிஜிபி சுனில்குமார் கவுதம் தலைமையில் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

புதுவை நகரம், கிராமப்புறங்களில் முக்கிய  சாலைகள், மாநில எல்லைகளில் ஆயிரக்கணக்கான போலீசார் ரோந்து பணிகளில்  ஈடுபட்டிருந்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் யாரேனும்  நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். தலைமை தபால்  நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் முன்  துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக்கிய சந்திப்புகளில்  தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தன. இதனிடையே காமராஜர் சாலையில் திறந்திருந்த ஒரு  பெட்ரோல் பங்க் மீது சிலர் தாக்குதல் நடத்தியதில் பங்க் கண்ணாடி உடைந்தது.  இதேபோல் கம்பன் கலையரங்கம் எதிரே திறந்திருந்த பெட்ரோல் பங்க்கை  போராட்டக்காரர்கள் மூடச் சொன்னதால் நிர்வாகம் உடனடியாக மூடியது. இதனால் பெட்ரோல்- டீசல் எரிபொருள் நிரப்ப வந்த இருசக்கர வாகன  ஓட்டிகள் ஏமாற்றமடைந்தனர்.

× RELATED பள்ளிகளை ஆய்வு செய்ய கவர்னர் உத்தரவு