×

ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு

ஹவுரா:  மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுராவில் நேற்று முன்தினம் ராமநவமியையொட்டி நடந்த ஊர்வலத்தின்போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையில், போலீசாரின் வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது, கடைகள் சூறையாடப்பட்டது. இதனை தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் வகையில் காசிபாரா  பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது திடீரென மர்மநபர்கள் செங்கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மீண்டும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அங்கு திரண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர். கல்வீச்சு சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர். நேற்று முன்தினம் முதல் இதுவரை 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதனை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு பாஜ மற்றும் வலதுசாரி அமைப்புக்கள் காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.  இதற்கிடைேய ஹவுராவில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா  மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தபோஸிடம் தொலைபேசி மூலமாக விசாரித்தார்.




Tags : Ramnavami ,West Bengal ,Home Minister ,Amit Shah , Ramnavami riots Prohibitory Order 144 enforced in West Bengal: Home Minister Amit Shah reviews
× RELATED ராமநவமி யாத்திரைக்குழுவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது