×

பணவீக்கம், விலைவாசி உயர்வு பற்றி பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை பாரதிய ஜனதா முடக்குகிறது: முகுல் வாஸ்னிக் குற்றச்சாட்டு

சென்னை: பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவைகளை குறித்து பேசாமல் தவிர்க்க நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆளும் கட்சியான பாஜ முடக்குகிறது என முகுல் வாஸ்னிக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்நிக் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவது ஆளும் கட்சியான பாஜ தான். பணவீக்கம், விலைவாசி உயர்வு பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவை குறித்து பேசாமல் தவிர்க்கின்றனர்.ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு வந்தவுடன் மிக விரைவாக அவர் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் சட்ட வல்லுநர் குழு இந்த வழக்கு குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா தேர்தலில் இந்த விவகாரம் எதிரொலிக்குமா என்பதை விட நாடு முழுவதும் மக்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் பாஜ மீது கோவமாக இருக்கின்றனர். மக்கள் ராகுல் காந்தியுடன் ஒன்றாக இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ‘பாஜவின் ஜனநாயகப் படுகொலை’ என்ற புத்தகத்தை முகுல் வாஸ்நிக் வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மாநிலத் துணைத் தலைவர் கோபண்ணா, எம்பிக்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத் மாவட்ட தலைவர்கள் எம். எஸ். திரவியம், சிவராஜசேகரன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுமதி அன்பரசு மற்றும் ஜெயம் ஜெ.கக்கன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Bharatiya Janata Party ,Mukul Wasnik , Bharatiya Janata Party blocking parliamentary proceedings to avoid talking about inflation, price rise: Mukul Wasnik alleges
× RELATED பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்