×

நீதிமன்ற சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்ற பின் கோயில் நிதி ஆதாரத்தை பொறுத்து தேவையான இடங்களில் கல்லூரி: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருத்துறைப்பூண்டி கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்) பேசுகையில், ‘‘திருத்துறைப்பூண்டி தொகுதி, முத்துப்பேட்டை பெரியநாயகி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து மகளிர் கலைக் கல்லூரி துவக்க அரசு முன்வருமா?” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘மந்திரபுரீஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில் சார்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற அந்தப் பள்ளியில், 1,064 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த கோயிலுக்கு முதல்வர், 2022-23ம் ஆண்டு, ரூ.2.78 கோடி ஒதுக்கீடு செய்து, கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இன்னும் கூடுதலாக 4 வகுப்பறைகள் அந்தப் பள்ளியின் சார்பில் கேட்கப்பட்டதை தொடர்ந்து, ரூ.66 லட்சம் செலவில் அந்த பணிகளும் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டிருக்கின்றன. கல்லூரி அமைக்கின்ற நிலையைப் பொறுத்தளவில், முதல்வரால் 2021ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் 4 கல்லூரிகள் 7-11-2021ம் ஆண்டு தற்காலிக கொட்டகையில் தொடங்கப்பட்டன. நல்மனம் கொண்டோர் பலர் இப்படி கல்லூரிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டால், முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் நற்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக நீதிமன்றங்களில் பல்வேறு கோணங்களில் வழக்குகளை தொடுத்து இருக்கிறார்கள்.

முதல்வர் பெரியதொரு, நீண்டதொரு சட்டப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த 4 கல்லூரிகள் செயல்படுவதற்கு தடையேதும் இல்லையென்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்கூட, அதையும் தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். இந்த 4+6 கல்லூரிகளுடைய சட்டப் போராட்டத்தில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து கொண்டிருக்கிறோம். இதில், வெற்றி கிட்டிய பிறகு  பெரியநாயகி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.17 சென்ட் ஏக்கரில் கல்லூரி தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

* பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பேசுவார்கள். இறுதியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள்.

Tags : Minister ,Shekharbabu , After winning the legal battle in the court, the college where necessary depending on the source of temple funds: Minister Shekharbabu speech
× RELATED அதிமுகவினர் வேண்டுமென்றே தகராறு...