×

ரூ.10 லட்சம் பறிப்பு வழக்கில் சாட்சிகளை மிரட்டியதாக பெண் இன்ஸ்பெக்டர் மீண்டும் கைது

மதுரை: மதுரையில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த சம்பவத்தில், சாட்சிகளை மிரட்டியதாக எழுந்த புகாரில் பெண் இன்ஸ்பெக்டரை, போலீசார் மீண்டும் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த அர்சத் என்பவர் பேக் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர், பேக் தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த ஆண்டு ரூ.10 லட்சம் பணத்துடன் தேனி ரோடு வழியாக மதுரைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி ஆகியோர் வாகன சோதனை நடத்தி, அர்சத் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக் கொண்டதாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, இன்ஸ்பெக்டர் வசந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பணியிலிருந்தும் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வசந்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து ஊமச்சிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில், இன்ஸ்பெக்டர் வசந்தி நேற்று காலை தப்பிக்க முயன்றார். தகவலறிந்து வந்த தனிப்படை போலீசார், காரை வழிமறித்து அவரை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், வசந்தி இறங்க மாட்டேன் எனக்கூறி காரிலேயே பிடிவாதமாக அமர்ந்திருந்தார். இதையடுத்து போலீசார், அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றி ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சாட்சிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை மீண்டும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


Tags : Female inspector arrested again for threatening witnesses in Rs 10 lakh embezzlement case
× RELATED 45 வயது தாயை கழற்றி விட்ட 24 வயது காதலன்...