×

விசாரணை நடந்து வரும் நிலையில் முறைகேடு புகாரில் சிக்கிய பேராசிரியருக்கு பதிவாளர் பதவி: பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணை வளையத்தில் உள்ள பேராசிரியருக்கு, பொறுப்பு பதிவாளர் பதவி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த நியமனங்களில் தகுதியற்றவர்களுக்கு பணி வழங்கியதாகவும், சமூக நீதி பின்பற்றப்படாமல் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், உபகரணங்கள் கொள்முதலிலும் ஊழல் நடந்ததாக புகார் உள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த உயர்கல்வித்துறை சார்பில், விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பொறுப்பு வகித்து வந்த பாலகுருநாதன், விரைவில் ஓய்வுபெறவுள்ளதால், அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அப்பொறுப்புக்கு கணினி அறிவியல் துறை தலைவர் தங்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அப்பொறுப்பில் இருந்த இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைத்துள்ள குழுவின், விசாரணை வளையத்திலும் உள்ளார். தற்போது மீண்டும் அவருகே முக்கிய பொறுப்பு வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* விசாரணைக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம்
பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான புகாரை விசாரிக்க குழு அமைத்து, கடந்த ஜனவரி 9ம் தேதி உயர்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், குழுவின் அறிக்கையை 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 30ம் தேதி மற்றும் இம்மாதம் 6ம் தேதியன்று, பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வந்த குழுவினர் சம்பந்தப்பட்ட புகார் தொடர்பான பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக, இக்குழுவினர் உயர்கல்வித்துறையை கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 2 மாதங்களுக்கு அவகாசம் வழங்கி, முதன்மை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Periyar University , Professor caught in malpractice case pending investigation: Controversy in Periyar University
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...