×

ரூ.2438 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்: பிடித்து விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் திட்டம்

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவரைப் பிடித்து விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை.

இதையடுத்து, பொதுமக்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக், ஐஜி ஆசியம்மாள், எஸ்பி மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குனர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனரும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அதேநேரத்தில், இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் என்பவரிடம் வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ரூ. 12 கோடி கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு உயர் அதிகாரிகளை வளைக்க திட்டமிட்டிருந்தார். இதற்காக சில இடைத்தரகர்களை அணுகியுள்ளார்.

ஆனால் பொருளாதாரக் குற்றப்பிரிவில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றுவதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ், அதோடு ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதை தனது வாக்குமூலத்தில் ரூசோ கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மோசடி பணமான ரூ. 12 கோடியை வாங்கிய சுரேஷை விசாரிக்க போலீசார் தேடினர். ரூசோ கைதான தகவல் வெளியானதும், ஆர்.கே.சுரேஷ், துபாயுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டால் மேலும் பல பாஜக நிர்வாகிகள் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆர்.கே.சுரேஷ், வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய பாஜக நிர்வாகிகள் வேறு யாரிடமாவது பணத்தைக் கொடுத்துள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆர்.கே.சுரேஷை தமிழகத்திற்கு அழைத்து வர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

* மேலும் 6 நாள் காவல்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 28ம் ேததி ஆருத்ரா கோல்டு முறைகேடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹரீஸ், மாலா ஆகிய இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி வழக்கை விசாரித்து, இந்த வழக்கில் ஹரீஷை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும் மற்றொரு இயக்குனர் மாலதியை ஒரு நாள் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தார். ஹரீஷிடம் 4 நாட்கள் போலீஸ் விசாரணை முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பாபு ஆஜராகி, விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. பல தகவல்கள் பெறப்படவுள்ளன. விசாரணையில்தான் அனைத்தும் தெரியவரும் என்றார். இதையடுத்து, ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷை ஏப்ரல் 6ம் தேதிவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் ஹரீசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : RK Suresh ,Economic Offenses Division police , Actor RK Suresh flees abroad in Rs 2438 crore Arudra Gold fraud case: Economic Offenses Wing police plan to catch and investigate
× RELATED மைவி3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி...