×

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: இன்றிரவு அஜபா நடனத்துடன் தேருக்கு எழுந்தருளும் சுவாமி

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா பந்தல்கால் முகூர்த்தம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.  கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நாளை(ஏப்.1) கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு 1 மாதமாக ஆழித்தேர் உள்ளிட்ட 5 தேர்களுக்கும் தேர் சீலைகள் மற்றும் மரக்குதிரைகள், யாழி பொம்மைகள் உள்ளிட்டவை பொருத்தும் பணி நடைபெற்று வடங்கள் பொருத்தும் பணியும் முடிவுற்றது. மேலும் ஆழிதேரில் ஹைட்ராலிக் பிரேக் உரிய முறையில் இயங்குகிறதா என திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆழித்தேருக்கான வடம் கட்டும் பணியில் இளைஞர்கள், கோயில் பணியாளர்கள் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். பக்தர்கள் கையில் இருந்து நழுவாத வகையிலும், பாதுகாப்பாக இழுக்கும் வகையிலும் வடத்தை தும்பு கயிறு மூலம் மூட்டினர். இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், தேருக்கு 6 வடங்கள் உள்ளன. அதில் 4 பொதுமக்களுக்கும், 2 பொக்லைன் இயந்திரங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.  

ஆழித்தேர், விநாயகர், சுப்ரமணியர், கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் தயார் நிலையில் உள்ளது. நாளை ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு தியாகராஜசுவாமி தனக்கே உரிய அஜபா நடனத்துடன் விட்ட வாசல் வழியாக இன்று இரவு ஆழித்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, நாளை காலை 7.30 மனியளவில் ஆழித்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.  ஆழித்தேருக்கு முன்னாள் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்களும் ஆழித்தேருக்கு பின்னாள் கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்படுகின்றன. ஆழித்தேருக்கு முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


Tags : Thiruvarur Thiagarajar ,Swami , Thiruvarur Thiagarajar Temple Azhitherotat tomorrow: Swami will get up in chariot with ajapa dance tonight
× RELATED திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்: திரளான பக்தர்கள் வழிபாடு