×

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஜூன் 28ல் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஜூன் 28ல் குடமுழுக்கு குடமுழுக்கு செய்திட நாள் குறிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து: திருத்துறைப்பூண்டி தொகுதி, முத்துப்பேட்டையில் இந்து சமய அற்றிலையத்துறை சார்பில் மகளிர் கல்லூரி அமைத்து தரப்படுமா? ஆம் எனில் எப்போது? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்; மந்திரபுரீஸ்வரர் பெரியநாயகி அம்மன் திருக்கோயில் சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற பள்ளியில் 1,064 மாணவச் செல்வங்கள் பயின்று வருகின்றனர்.

அந்தப் பள்ளிக்கு முதலமைச்சர் 2021 - 2022 ஆம் ஆண்டில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து 21 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூடுதலாக 4 வகுப்பறைகள் தேவையென இப்பள்ளியின் சார்பில் கோரப்பட்டதை தொடர்ந்து ரூ.66 லட்சம் செலவில் வகுப்பறைகள் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ரூ.66 லட்சம் செலவில் முதலமைச்சர் 2021ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்கள். அதில் 4 கல்லூரிகள் கடந்த 02.11.2021 அன்று தற்காலிக கட்டிடத்தில் தொடங்கப்பட்டன. நல்ல மனம் கொண்டோர் பலர், கல்லூரிகள் செயல்பாட்டிற்கு வந்து விட்டால் முதல்வர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் நற்பெயர் வந்துவிடும் என நீதிமன்றங்களிலே பல்வேறு கோணங்களில் வழக்குகளை தொடர்ந்து இருக்கின்றார்கள்.

இதற்கு முதலமைச்சர் நீண்டதொரு சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். ஏற்கனவே தொடங்கப்பட்ட கல்லூரிகள் 4 செயல்படுவதற்கு தடை ஏதும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட அதையும் தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். இந்த கல்லூரிகள் தொடர்பான சட்டப் போராட்டத்தில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த வெற்றி கிட்டிய பிறகு தாங்கள் கோரிய கல்லூரி தொடங்குவது குறித்து பரீசிலிக்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து: திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை பெரியநாயகி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியோடு 14 அரசு மேல்நிலைப் பள்ளியில் இருக்கின்றது.

அங்கே இருக்கின்ற ஏழை விவசாயிகளும், தொழிலாளர்களும், பின் தங்கி இருக்கின்ற மீனவ பெருமக்களும், இஸ்லாமிய மக்களின் பிள்ளைகளும் படிக்கின்ற பள்ளிக்கு அதுதான் அடித்தளமாக இருக்கின்றது. ஆனாலும் உயர்கல்வி என்று வருகின்ற போது உயர்கல்வி கட்டமைப்பு இல்லாத சூழ்நிலையில் அவர்கள் முத்துப்பேட்டையில் இருந்து கிட்டத்தட்ட 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற தஞ்சாவூருக்கும், அதிராம்பட்டினத்திற்கும், மன்னார்குடிக்கும், வேதாரண்யத்திற்கும் செல்ல வேண்டிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலைத்துறை கோயில் நிலத்திலும், மடங்களின் நிலத்திலும் கல்லூரியை அமைத்து தர ரத்தத்தை வேர்வையாக்கி உழைக்கும் தொகுதி மக்கள் நின்று கேட்கிறார்கள். சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு அரசை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தொகுதி மக்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி நலனிற்கு சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து கொடுக்கின்ற நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் கல்லூரி வருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தாயுள்ளம் கொண்ட முதல்வரை வணங்கி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; கேளாமல் கொடுக்கின்ற மனது, கேட்டதெல்லாம் தருகின்ற குணம் கொண்ட, இன்னார் இனியவர் என்று இல்லாமல் வாய்ப்புகள் இருக்கின்ற பணிகளை எல்லாம் நிறைவேற்றி தர வேண்டும் என்று தான் முதலமைச்சர் எங்களை போன்ற அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு இருக்கின்றார். நான் சொன்னது போல் இல்லையென்று உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

கமா தான் வைத்திருக்கிறோம். சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு உங்களுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து: அமைச்சர் அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டு, திருத்துறைப்பூண்டியில் அருள்பாலித்து கொண்டு இருக்கின்ற பிறவி மருந்தீஸ்வரர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அதேபோல் கோட்டூரில் இருக்கின்ற கொழுந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு திருத்தேர் வழங்க அமைச்சர் அவர்கள் முன் வருவார்களா என்று பேரவைத் தலைவர் வாயிலாக கேட்டு அமருகிறேன். இதற்கு பதிலளித்த அமைச்சர்; திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஏற்கனவே ரூ.1.28 கோடி செலவிலே திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

28.06.2023 அன்று குடமுழுக்கு செய்திட நாள் குறிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு திருத்தேர் கேட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்பு உற்சவத்தன்று திருத்தேர் ஓடியதாக குறிப்புகள் இருக்கின்றது. திருத்தேர் ஓடுகின்ற பாதையில் பல ஆக்கிரமிப்புகளால் ஏற்கனவே இருந்து அளவிற்கு திருத்தேர் செய்தாலும் தேர் வலம் வருகின்ற சுவடு இல்லாததால் தொல்லியல் துறையைச் சார்ந்த வல்லுநர்களை அனுப்பி இருக்கின்ற பாதைக்கு ஏற்றார் போல் எந்த அளவிற்கு திருத்தேர் செய்ய முடியுமோ அதற்குண்டான வடிவமைப்பை ஏற்படுத்தி உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றுவோம்.

பிறவி மருந்தீஸ்வரர் கோயில், முத்துப்பேட்டை பெரியநாயகி அம்மன் கோயில், கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் இப்படி 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கோயில்களில் போதுமான வருவாய் இல்லாத சூழ்நிலையை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் 2022 - 2023 ஆம் ஆண்டு 1,000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.100 கோடி முதன் முதலில் ஒதுக்கி தந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சாரும். அந்த ரூ.100 கோடியில் நீங்கள் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்கிறோம்.

47 திருக்கோயில்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓராண்டுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதுடன் மீதம் இருக்கின்ற 509 திருக்கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றன. படிப்படியாக ஆண்டுதோறும் இந்த திருக்கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம் பேசுகையில்; சீர்காழி தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருவெண்காட்டிலே நிறைய இடம் இருக்கின்றது. அங்கு உயர்நிலைப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் இருக்கிறது. பெண்கள் அதிகமாக படிக்கின்ற வாய்ப்பு நமது திராவிட ஆட்சியில் தான் உருவாகி இருக்கின்றது. அமெரிக்காவை விட தமிழகத்தில் தான் உயர் கல்வி அதிகம் பெறுகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறார்கள்.

எனவே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அந்த பள்ளியிலே அதிக இடம் இருக்கிற காரணத்தினால் ஒரு மகளிர் கலை கல்லூரியை உருவாக்கி தர அமைச்சர் அவர்கள் முன் வருவாரா என்று தங்கள் வாயிலாக கேட்டு அமருகிறேன். பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு;  திருவெண்காட்டில் இருக்கின்ற மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியை பற்றி உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டார். பூம்புகார் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று சுமார் ரூ.4 கோடி செலவிலே 24 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

உறுப்பினர்கள் கல்லூரிகள் கேட்கின்ற இடங்களில் எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நீதிமன்றத்திலே இருக்கின்ற வழக்கு முடிவுக்கு வந்த பிறகு எந்தெந்த இடங்களில் எல்லாம் கல்லூரிகள் தேவைப்படுகின்றனவோ, அந்த திருக்கோயிலுக்கு உண்டான நிதி வசதியை பொறுத்து ஆய்வு செய்து கல்லூரிகள் அமைப்பதற்கு உண்டான முயற்சியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும். சட்டமன்ற உறுப்பினர் பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்கள் : மேலூர் தொகுதி அழகர் கோயில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் உயர்நிலை பள்ளியோடு இணைத்து அங்கு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க அரசு முன்வருமா? அமைச்சர்: ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 27 பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த பள்ளிகளை இந்தாண்டு முதல் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பள்ளிகளுடைய நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு தமிழக முதல்வர் அறிவித்திருக்கின்றார்கள். பள்ளிக்கல்வித்துறை எந்த வகையில் தங்களின் செயல்பாடுகளை இப்பள்ளிகளில் ஏற்றுக் கொள்ள இருக்கின்றதை கருத்தில் கொண்டு, மேலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கோரிய சுந்தர ராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பள்ளிகளின் கட்டமைப்பை உயர்த்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து நல்லதொரு தீர்வு காணப்படும் என்று கூறினார்.


Tags : Kodumkuku ,Tiruthurapoondi Biravi Darshaneeswarar Temple ,Minister ,Shekharbabu ,Legislative Assembly , 28th June Kudumku to Thiruthurapoondi Piravi Darsaneeswarar temple: Minister Shekharbabu announced in the Legislative Assembly
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...