×

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், திடீரென அங்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், தொழிலாளிகளிடம் கலந்துரையாடினார். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நமது நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் இந்த புதிய நாடாளுமன்றத்தை கட்டி வருகிறது. மத்திய பாஜக அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார்.
சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுவதாக கூறப்படும் புதிய நாடாளுமன்ற கட்டத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை திடீரென புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த பிரதமர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கலந்துரையாடியதோடு, இரு அவைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Tags : Parliament ,Narendra Modi , Construction works of the new Parliament: Prime Minister Narendra Modi made a surprise inspection!
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...