×

ஒப்பந்த கூலி வழங்காத ஜவுளி உற்பத்தியாளர் பட்டியலை கலெக்டரிடம் வழங்க முடிவு

சோமனூர், மே 25: கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூலி உயர்வு பேச்சுவார்த்தை கடந்த 2014ம் ஆண்டு நடந்தது. இந்த கூலி உயர்வை கடைசியாக கடந்த 6ம் தேதி முதல் அமல்படுத்த மாவட்ட கலெக்டர் ஹரிகரன் உத்தரவிட்டார். ஆனால், சில ஐவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கவில்லை. தமிழக அரசு சார்பில் தொழிலாளர் நல கோவை மண்டல இணை ஆணையர் அறிவித்த கூலியை அமல்படுத்த பலமுறை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் நெருக்கடியை காரணம்காட்டி, கூலியை உயர்த்தி வழங்க மறுத்தனர்.  

விசைத்தறியாளர்களும் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்து போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்கள், எம்எல்ஏக்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள்,  விசைத்தறியாளர்களுக்கு முழுமையாக கூலியை வழங்க உத்தரவிடப்பட்டது.  ஆனால், சோமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் இதுவரை பழைய கூலியையே வழங்கி வருகின்றனர். சிலர், கூலி உயர்வு வழங்க மறுத்துள்ளனர். இதனால், கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள் பட்டியலை விசைத்தறி சங்கத்தினர் தயாரித்து வருகின்றனர். இதை வரும் திங்கள்கிழமை (மே 28) மாவட்ட கலெக்டர் ஹரிகரனிடம் வழங்க உள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்