×

பருவம் தவறிய மழையால் பூக்கள் உதிர்ந்து மாமரங்களில் மகசூல் பாதிப்பு: நத்தம் பகுதி விவசாயிகள் கவலை

நத்தம்: பருவம் தவறி பெய்த மழையால் மாம்பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால் தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நத்தம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் மா விவசாயிகளுக்கு சேதத்தை கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான பரளி, தேத்தாம்பட்டி, வத்திபட்டி, சிறுகுடி, சமுத்திராப்பட்டி, மணக்காட்டூர், புன்னப்பட்டி, உலுப்பகுடி, துவராபதி மற்றும் செந்துறை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மா சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாமரங்கள் விளைச்சல் தரும். கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மா மரங்களில் பூக்கள் பிடிப்பதற்கு விவசாயிகள் மருந்து தெளித்தனர். இதைத் தொடர்ந்து ஆங்காங்கே மரங்கள் பூத்துக் குலுங்கின. ஆனால் இந்த வருடம் இயற்கையாக பருவமழை பெய்து பூமி செழித்த நிலையில் மாமரங்களில் பூக்கள் பூத்து குலுங்கின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். மாமரங்களில் பூக்கள் பூத்திருந்த நிலையில், நத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பருவம் தவறி, 3 நாட்கள் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் பூக்கள் நனைந்து, அழுகி உதிர்ந்து விட்டன.

பெரும்பாலான பூக்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து விட்டதால் இந்த ஆண்டு மா விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் கொக்கிப்புழு தாக்குதல், பூக்களில் இருந்து தேன் வடிந்து, பூக்கள் கருகி விட்டன. இதில் தப்பி பிழைத்த பூக்கள் மட்டுமே தற்போது காய்த்துள்ளன. இதனால் மரங்களில் முழுமையான விளைச்சல் இன்றி காணப்படுகிறது. தவிர கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மரத்தில் இருந்து பிஞ்சுகளும் உதிரத் தொடங்கின. வேறு வழியின்றி அவற்றை சேகரித்து மார்க்கெட்டிற்கு குறைந்த விலைக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இது கிலோ ரூ.5 முதல் ரூ.12 வரை மட்டுமே விலை போகிறது. இது குறித்து நத்தம் பகுதியை சேர்ந்த மா விவசாயிகள் கூறுகையில், ‘‘சாரல் மழையால் மாமரங்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்களில் விளைச்சலுக்கு விடும் அளவிற்கு காய்கள் செழிப்பாக இல்லை. குறைந்த அளவு காய்களை முன்னதாகவே விலை கிடைப்பதால் செலவுகளை சரி கட்டும் வகையில் பறித்து விற்று வருகிறோம்.

இந்த ஆண்டு சித்திரையில் இப்பகுதியில் இருந்து வழக்கமான எண்ணிக்கையில் மாம்பழங்கள் கிடைக்காது. மருந்து தெளித்த செலவினங்கள் பெறுவதே சிரமமாக உள்ள நிலையில், மழையால் மகசூல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு நிச்சயம் இழப்பு ஏற்படும். பாதிப்பை கணக்கிட்டு மா விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Natham , Unseasonal rains cause fall of flowers and damage to yield in mangoes: farmers of Natham region worried
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...