×

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அமராவதி முதலை பண்ணை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

உடுமலை: அமராவதி முதலை பண்ணையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சி அளிப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி, திருமூர்த்தி அணைகள், பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில், அமராவதி முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஓரளவு பொழுது போக்க முடியும். பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்தில் உள்ள தடாகத்தில் குளித்து மகிழ்வார்கள். நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் போன்றவையும் உள்ளன. அங்கு பெரிய அளவில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையும்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அமராவதி அணை பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடையும் நிலை இருந்தது. அணை பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வரக்கூடிய முதலை பண்ணையும் கடந்த காலங்களில் உரிய பராமரிப்பின்றி கிடந்தது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அமராவதிநகர் முதலை பண்ணையில் வனத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.அமராவதி முதலை பண்ணை 1975-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அமராவதி அணையில் இருந்து வெளியேறும் முதலைகள் பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கும் பணி துவங்கியது.

இவை நன்னீர் இனத்தை சேர்ந்த முதலைகள் ஆகும். இங்கு மொத்தம் 90 முதலைகள் உள்ளன. 13 வயது முதல் 48 வயது வரை உள்ள முதலைகள், வயதுக்கேற்றவாறு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனி தண்ணீர் தொட்டிகளில் விடப்பட்டுள்ளன. முதலைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு பிரித்து விடப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த காலங்களில் ஒரே வயதுடைய முதலைகள் சண்டையிட்டு ரத்தக்களரியான சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்ட முதலை பூங்காவில், கழிவறை வசதி, சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. பசும் புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் முதலைகளை பார்வையிட வசதியாக பாதுகாப்பான முறையில் உயரமான கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணையில் ஆங்காங்கே யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வன விலங்குகள், அரிய வகை பறவைகளின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. மேலும், கேரளாவைச் சேர்ந்த ஓவியர் மூலம் முதலை பண்ணையின் சுவர்களில் விலங்கு, பறவையினங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு, அவை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தற்போது, கோடை துவங்கியுள்ள நிலையில், அமராவதி வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் முதலை பண்ணைக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.

இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறுகையில், “பண்ணையில் பெரிய  மற்றும் சிறிய முதலைகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகளுடன் பொழுதுபோக்குவதற்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடும்பத்துடன் இங்கு வந்து செல்ல ஏற்ற இடமாக உள்ளது. மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அமராவதி அணை பூங்காவில் ஒன்றும் இல்லாத நிலையில், இந்த முதலை பண்ணை பயனுள்ளதாக உள்ளது. கோடை விடுமுறையில் குழந்தைகளுடன வந்து கண்டுகளிக்கலாம்” என்றனர்.

Tags : Amaravati crocodile farm with new look: increase in tourist arrivals
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்