×

குடிநீர் தேவையை சமாளிக்க குன்னூர் வைகை ஆற்றில் அனைத்து உறை கிணறுகளையும் தூர்வார வேண்டும்: ஆழ்துளை கிணறுகளை அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால், ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டியில் வைகை அணை அமைந்திருந்தாலும் ஒரு வறட்சியான பகுதியாகவே உள்ளது. ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100க்கும்‌ மேற்பட்ட கிராமங்களும், 150க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடக்கிறது. இங்கு பெரும்பாலும் கிணற்று பாசனம், ஆழ்த்துளை கிணற்று பாசனம் மூலமாகவே விவசாயத்தில்‌ விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் விவசாயத்திற்கு வைகை தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை இருந்தாலும், குடிநீருக்கும், கால்நடை வளர்ப்பதற்கும் வைகை ஆற்று தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணைக்கு வருசநாடு, வெள்ளி மலை, பொம்மராஜபுரம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும்‌‌ மழை வைகை அணைக்கு நீர்வரத்தாக வருகிறது. இந்த நீர்வரத்து மூல வைகை ஆற்றின் வழியாக வந்து அணையில் சேருகிறது. ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, வண்டியூர், ஏத்தக்கோவில், அனுப்பப்பட்டி, சித்தையகவுண்டன்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வைகை ஆற்று தண்ணீர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக குன்னூர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்று நீர் மூலம் கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.‌ மேலும் கால்நடைகளுக்கும் இந்த தண்ணீரை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் மூல வைகை ஆற்றில் அதிகப்படியான நீர்வரத்து ஏற்பட்டது.

வைகை அணை நீர்மட்டம் 60 அடிக்கு மேல் உயர்ந்தே காணப்பட்டது. வைகை அணையின் நீர்மட்டம் 65 அடிக்கு மேல் உயர்ந்து இருந்தால் குன்னூர் உறை கிணறு பகுதிகளிலும் அதிகப்படியான தண்ணீர் தேங்கி இருக்கும். இதனால் கடந்தாண்டு பருவ மழை காலங்களிலும் கோடை காலத்திலும் சிரமம் இல்லாமல் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதலே நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைய தொடங்கியது. வெயில் காலம் தொடங்கி தற்போது அதிகப்படியான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரிந்து கொண்டே வருகிறது. மூல வைகை ஆற்றிலும் நீர்வரத்து ஏற்படவில்லை.

இதனால் குன்னூர், வைகை ஆற்றில் தேங்கியிருக்கும் தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. கடுமையான வெயில் காரணமாக உறை கிணறுகளை சுற்றி உள்ள தண்ணீரும் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தாலும் உறை கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது. தண்ணீர் இல்லாமல் தற்போது வைகை ஆறு வறண்டு காணப்படும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சராசரியாக வினாடிக்கு 256 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குறைந்தளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றின் கரையோர விவசாயிகள் மேட்டார் மூலம் சட்டவிரோதமாக நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

குறைந்த நீர்வரத்தின் காரணமாக குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகளின் நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது. இதேநிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. உறை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து கொண்டே வரும் காரணத்தினால் கிராமப்புறப் பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் டேங்கர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.‌

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘கிராமங்களை தற்போது கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குடிநீருக்கும், கால்நடைகளுக்கு பயன்படுத்துவதற்கும் தண்ணீரை பற்றாக்குறையாக உள்ளது. எனவே குடிநீர் தேவையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் உறை கிணறுகளை தூர்வார வேண்டும். கிராமங்களின் குடிநீர் தேவைக்கு அதிகப்படியான‌ தண்ணீர்‌ விநியோகிப்பதற்கு‌‌ அதற்கு தகுந்தாற்போல் மோட்டார்கள் அமைக்க வேண்டும். கிராமங்களில்‌ ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Vaigai River, ,Coonoor , All casing wells should be drilled in Vaigai River, Coonoor to meet drinking water demand: Public demand to construct borewells
× RELATED குன்னூர் பாரஸ்டேல் பகுதியில் 8 நாட்கள் எரிந்த காட்டுத்தீ அணைந்தது