×

காலம் முறை ஊதியம், பணி நிரந்தரம் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

ஊட்டி: காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும். 5 ஆண்டுகள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூங்கா ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ணை மற்றும் பூங்காக்களில் 800க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இதுவரை 300 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 500 பேர் தற்காலிக பணியாளர்களாவே உள்ளனர்.

நிரந்தர பணியாளர்களுக்கு தற்போது வரை சிறப்பு கால முறை ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. காலமுறை ஊதியம் வழங்கப்படாத நிலையில், குறைந்த அளவே அவர்களுக்கு ஊதியம் கிடைக்கிறது. மேலும், தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் பலர் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றிய போதிலும், அவர்களை பணி நிரந்தம் செய்யாமல் உள்ளது. மேலும், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும், 5 ஆண்டுகள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம்  செய்ய வேண்டும், பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும், தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் பண்ணை பணியாளர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய சந்தா தொகை பிடித்தம் செய்திட வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் பத்தாண்டு பணிக்காலம் முடிந்தவர்களுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,

பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் காலியாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப்படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு கலெக்டர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தோட்டக்கலை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9வது நாளாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : The park employees are begging in the botanical garden, insisting on various demands such as regular pay and permanent job
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...