×

துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மறியல் செய்த ஸ்டாலின் கைது திமுகவினர் சாலைமறியல் போராட்டம் ஐ.பெரியசாமி உள்பட 260 பேர் கைது

திண்டுக்கல், மே 25: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  கைது செய்யப்பட்டதை கண்டித்தும் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். திண்டுக்கல் மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாநில துணைப் பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி தலைமையில் கட்சியினர் ஊர்வலமாகப் புறப்பட்டனர். இதில் கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் உள்பட ஏராளானமான தொண்டர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டவாறு திண்டுக்கல் பஸ் நிலையம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற கிழக்கு மாவட்டத் துணைச்செயலாளர் நாகராஜன் மற்றும் நகரச்செயலாளர் ராஜப்பா ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் பேசினர்.

தகவலறிந்து சென்ற போலீசார், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்தனர்.  ஓட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் பேருந்துநிலையம் முன்  நடந்த மறியல் போராட்டத்துக்கு திமுக செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணிதுணைச் செயலாளர் பாண்டியராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் பன்னீர்செல்வம், கிட்டான், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தன், வார்டு செயலாளர் நாட்ராயன், அயோத்திராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் இவர்கள் அனைவரையும் கைது செய்தனர். பழநி பழநியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக நகரச் செயலாளர் தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி, முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் முருகபாண்டியன், காளீஸ்வரி பாஸ்கரன், இந்திரா, மகேஸ்வரி, செபாஸ்டியன் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

குஜிலியம்பாறை குஜிலியம்பாறையில் நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முழக்கமிட்டனர்.திமுக நிர்வாகிகள் பொன்சுப்பிரமணி, சௌந்தர்மாரியப்பன், செல்வநாராயணன், கர்ணன், ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திமுக நகரச் செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைதுசெய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் நடந்த மறியல் போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.நகரச் செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மறியலில் திமுக நிர்வாகிகள் மணிகண்டன், சிதம்பரம், ரவி, சிக்கந்தர்பாட்சா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசார் 60 பேரை கைது செய்தனர்.

Tags :
× RELATED வெயிலின் தாக்கத்தால் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்