×

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையதின் முயற்சிக்கு வைகோ கண்டனம்

சென்னை: தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையதின் முயற்சிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய உணவுப்  பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள அறிவிக்கை  மூலம் இந்தி மொழியைத் திணிக்க ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்து உள்ளது.

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம், கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனம்,கேரளாவின் மில்மா பால் நிறுவனம் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் விற்பனை செய்யும் தயிர்  உறைகளில், “தஹி” என்ற இந்திச் சொல்லைத்தான் ஆக°ட் - 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த வேண்டும். தயிர் உறைகளில் தயிரின் ஆங்கில பெயரை (ஊரசன) நீக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.

ஆவின் தயிர் உறைகளில் ‘தயிர்’ என்ற சொல்லும், ‘உரசன’ என்ற ஆங்கிலச் சொல்லும் இடம் பெற்று உள்ளன. இதில், ஆங்கில வார்த்தையை நீக்கி விட்டு, “தஹி” என்ற இந்தி சொல்லைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

உணவுப்பொருட்களை உறைகளில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அந்த அதிகாரத்தைப் பயன் படுத்தி, ஒன்றிய பா.ஜ.க அரசு இந்தியைத் திணிக்க இந்த அத்து மீறலில் இறங்கி உள்ளது. ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்புக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு ஆகும். இத்தகைய இந்தித் திணிப்பு கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய அரசின் உத்தரவுக்குப் பணியாமல் ஆவின் தயிர் உறைகளில் இந்தி சொல்லைப் பயன் படுத்த மாட்டோம் என திராவிட மாடல் தமிழ்நாடு அரசு பதிலடி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்தி திணிப்பு அறிவிக்கையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : VAICO ,Food Safety Authority of India , Curd cover, attempt to impose Hindi, Food Safety Authority of India, Vigo condemned
× RELATED பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உச்ச...