×

தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு 31-ந் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எனவே செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநீட்டிப்பு செய்ததற்கான அவசியம் ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, செய்முறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிளஸ்-2 மொழிப்பாடங்கள் தேர்வில் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ ஆன சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. செய்முறை தேர்வில் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்றால், அடுத்ததாக பொதுத்தேர்வு தொடங்கும்போது மொழிப்பாடங்களிலும் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’ விவகாரம் கண்டிப்பாக இருக்கும். கால நீட்டிப்பு செய்யப்பட்ட நாட்களில் பங்கேற்காத மாணவர்களை எவ்வாறு செய்முறை தேர்வில் கல்வித்துறை பங்கேற்க வைப்பார்கள்? அதேபோல், பொதுத்தேர்விலும் அவர்களை எப்படி கலந்து கொள்ள செய்வார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, 10th Class, Practical Examination
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...