×

துவங்கியது கோடைகாலம்: பழநி பகுதியில் மண்பானை விற்பனை ‘விறுவிறு’

பழநி: கோடைகாலம் துவங்கி உள்ளதால் பழநி பகுதியில் மண்பானை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. பழநி பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. கோடை வெயில் உக்கிரமடைந்து வருவதையடுத்து, பகல் வேளைகளில் பொதுமக்கள் தேவையின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக முதியவர்கள், வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும் என்றும், அவசியம் ஏற்பட்டால் துணையுடன் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க ேவண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். பிரிட்ஜ்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை குடிக்க வேண்டாம் என்றும், இயற்கையான முறையில் மண்பானைகளில் தண்ணீர் பிடித்து வைத்து குடிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து பழநி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மண்பானை விற்பனை அதிகரித்து வருகிறது. தண்ணீர் பானைகள், கூஜா, ஜாடி, சொம்புப்பானை, குழாய் பொருத்திய மண் பானை என பல்வேறு வடிவங்களில் மண்பாண்டப் பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

சிறிய அளவிலான பானைகள் ரூ.50ல் துவங்கி ரூபாய் ரூ.100 வரையிலும், 10 லிட்டர் முதல் 30 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பானைகள் ரூ.250ல் துவங்கி ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்துவதற்காக மண் பானைகளை அதிகளவு மக்கள் வாங்கிச் செல்கின்றனர். ‘பிரிட்ஜ் போன்றவற்றில் வைத்து குடிக்கும் தண்ணீரால் உடலின் வெப்ப தாக்கத்தை குறைக்க முடியாது. எனவே, இயற்கையான முறையில் தண்ணீரை குளிர்ச்சியாக்கும் மண்பானைகளை மக்கள் அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்’ என்று மண்பாண்டப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Palani , Summer has started: sale of earthen pots in Palani area is 'brisk'
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது